ADDED : ஜூலை 09, 2024 11:33 PM

நத்தம்:நத்தம் அருகே வேலை வாங்கித்தருவதாக கூறி 9 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவரது மனைவி மணிமாலாவிடம் உறவினர் ஹரிராம் மூலம் அணுகிய திண்டுக்கல் கசவனம்பட்டியை சேர்ந்த அர்ஜூன்பாண்டி 33 , தனது உறவினர் பழநி முருகன் கோயிலில் உதவியாளராக உள்ளார். அவர் மூலம் கோயிலில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய மணிமாலா கூகுள் பே , வங்கிக் கணக்கு மூலம் ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளார்.
பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலை வாங்கி தராததால் அர்ஜூன் பாண்டியை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச் ஆப் 'செய்யப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அர்ஜூன் பாண்டி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நத்தம் போலீசில் புகார் அளித்தார். வெள்ளோடு பஸ்ஸ்டாண்ட் அருகே நின்ற அர்ஜூன் பாண்டியை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது தாம்பரம், விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சாவூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் மோசடி வழக்குகள் உள்ளன.