/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 'கொடை' யில் விபத்து அபாயத்தில் கட்டடங்கள் 'கொடை' யில் விபத்து அபாயத்தில் கட்டடங்கள்
'கொடை' யில் விபத்து அபாயத்தில் கட்டடங்கள்
'கொடை' யில் விபத்து அபாயத்தில் கட்டடங்கள்
'கொடை' யில் விபத்து அபாயத்தில் கட்டடங்கள்
ADDED : ஜூலை 18, 2024 07:09 AM

கொடைக்கானல், : கொடைக்கானலில் சரிவான நிலப்பரப்பு பகுதியில் உள்ள கட்டடங்கள் நிலச்சரிவு அபாய நிலையில் உள்ளன.
சுற்றுலா தலமான கொடைக்கானல் இயற்கை எழில் சூழ்ந்த பசுமை போர்த்திய மலை முகடுகள் சூழ்ந்த ரம்யமான மலை வாசஸ்தலமாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு கட்டடங்கள் அதிகரிக்க இதை ஒழுங்குபடுத்தவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மலைத்தள பாதுகாப்பு விதிகள் வந்தன.
அதன்படி நீதிமன்ற உத்தரவால் 2019 ல் விதிமீறலான கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து இயந்திர பயன்பாடுகளுக்கு தடை செய்யப்பட்டன.
இத்தகைய விதிகளை காற்றில் பறக்கவிட்ட அதிகாரிகளின் மெத்தனத்தால் சதுப்பு நிலத்தில் கட்டுமானம், சரிவான பகுதியில் விதிகளுக்கு புறம்பாக வானுயர்ந்த கட்டடம், அதில் போர்வெல், வெடி வைத்து பாறை தகர்ப்பு, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டுமானம் என கொடைக்கானல் நகரை இயற்கை பேரிடர் நிலைக்கு தள்ளி உள்ளது. மூணாறு எதிர்பாராத பேரிடரை சந்தித்து நுாறு ஆண்டுகளை கடந்துள்ளது. இது போன்ற பேராபத்தை உருவாக்கும் விதமாக கொடைக்கானலில் விதிமீறல் கட்டுமானம், இயந்திர பயன்பாடு தலைதுாக்கி உள்ளது.
கொடைக்கானலில் ரோட்டோரங்களில் உள்ள சரிவான பகுதியில் பாறை தகர்ப்பு, மண் வெட்டி எடுக்கப்பட்டு வணிக நிறுவனங்கள், தங்கும் விடுதி கட்டமைக்கப்பட்டுள்ளது.
2018 ல் கஜா புயலில் பெய்த 18 செ.மீ., மழையால் நிலச்சரிவு , கட்டமைப்புகள் சேதமடைந்து கொடைக்கானல் இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்களாகின.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் அவ்வப்போது பெருமழை பெய்து இயற்கை சீற்றங்களால் மண்சரிவு ஏற்படுகிறது. குடியிருப்புகள் அதிகம் உள்ள கொடைக்கானல் நகரில் விதிமீறல் கட்டுமானங்களால் விபத்து அபாயமும் இருக்கத்தான் செய்கிறது. சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரிக்க தங்கும் விடுதி, பல அடுக்கு கட்டுமானம் உள்ளிட்டவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
வரன்முறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கவனிப்பு பெற்று ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளனர். கொடைக்கானலை இயற்கை பேரிடர் விபத்திலிருந்து காக்க நீதிமன்றம் நேரடியாக களம் கண்டால் மட்டுமே தீர்வு என்ற நிலை உருவாகும்.