/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்… மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்… மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து
மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்… மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து
மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்… மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து
மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்… மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து
ADDED : ஜூலை 24, 2024 05:34 AM

சேமிப்புகள் உயரப்போவதில்லை
-வினோத் பாலசுந்தர், தொழிலதிபர், திண்டுக்கல்
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை குறைந்துள்ளது. கட்டுமான சம்பந்தமான அறிவிப்புகள் அதிகளவில் வந்துள்ளது. இதுதொழிலாளர்கள் மத்தியில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். புற்றுநோயை குணப்படுத்தும் மருந்துகளின் வரி குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கதக்கது. விவசாயிகளுக்கு பயனுள்ள அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் உள்ளது. மாத வருமானத்திற்கு வேலைக்கு செல்லும் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. எல்லா ஆண்டுகளும் இதேபோல் தான் பட்ஜெட் அறிவிக்கப்படுகிறது. ஏழை மக்கள் பயனடையும் வகையில் எந்த அறிவிப்புகளும் வரவில்லை. இதனால் சேமிப்புகளும் உயரபோவதில்லை.
தமிழகம் புறக்கணிப்பு
-வி.கருப்பையா, சமூக ஆர்வலர், வேடசந்துார்
தமிழகத்திற்கு சிறப்பான திட்டங்களோ சிறப்பு நிதியோ ஒதுக்கப்படாமல் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். ஆந்திர மாநிலத்திற்கு மறு சீரமைப்பு சட்டத்தின் படி ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு ரீதியாக ஒதுக்கி உள்ளனர். பீஹாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லுாரிகள், மின் உற்பத்தி ஆலைகள் என கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு செல்லும்படி எந்த நிதியும் ஒதுக்கவில்லை.
தனிநபர் வருமான வரி விலக்கு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் இல்லை. மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு எந்த லாபமும் இல்லை.
மாத ஊதியம் பெறுவோருக்கு ஆறுதல்
-எஸ்.ஜெயக்குமார், மாநில தலைவர், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், அய்யலுாார்
வருமான வரி திட்டத்தில் நிலையான கழிவு ரூ. 50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்ந்தது மாத ஊதியம் பெறுவோருக்கு ஆறுதல் தருகிறது. முத்ரா கடன் திட்டம் இரு மடங்காக உயர்த்தி ரூ.20 லட்சமாக மாறியிருப்பது , உயர் கல்விக்கடன் ரூ.10 லட்சமாக மாற்றி இருப்பது சிறப்பானவை. தங்கத்தின் இறக்குமதி வரி குறைப்பால் பவுனுக்கு ரூ.2200 உடனடியாக குறைந்திருப்பது நடுத்தர வர்க்கத்திற்கு ஆறுதலான விஷயம். வழக்கமாக மத்திய பட்ஜெட்டில் இடம் பிடிக்கும் தமிழ் மொழி, தமிழக சிறப்பு திட்டங்கள் இந்த முறை இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.
இளைஞர்களிடையே மகிழ்ச்சி
-அ. முத்துக்குமார், டீ கடை உரிமையாளர், கே. அய்யாபட்டி
சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் உச்சவரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது சிறு தொழில்கள் செய்து வரும் நடுத்தர மக்கள் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். கல்வி கடன் ரூ. 10 லட்சம் , வேலைவாய்ப்புக்கான ஊக்கத்தொகை திட்டம், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதி , படிக்கும் இளைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் திட்டமாக உள்ளது. தங்கம், வெள்ளி இறக்குமதி வரி குறைத்தது மூலம் தங்கம், வெள்ளி விலை குறையும். விவசாய வளர்ச்சிக்காக டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாய வளர்ச்சிக்கு உதவும்.
ஆதரவாகவும் இல்லை எதிராகவும் இல்லை
-துரைமுருகன், தொழில் முனைவோர், திண்டுக்கல்
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொழிலை விரிவுப்படுத்த எம்.எஸ்.எம்.இ., மூலம் கடனுதவி ரூ.20 லட்சம் அறிவிப்பு வரவேற்க கூடியது. தனிநபர் வருமான வரி சதவீதம் குறையும் என எதிர்பார்த்தோம்.ஆனால் மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயிகளை ஈடுபடுத்தப்போவதான அறிவிப்பு நல்ல விஷயம். விவசாயிகளுக்கு ஆதரவாக கடன் தள்ளுபடி போன்ற கூடுதலாக அறிவிப்புகள் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தங்கம் , வெள்ளி மீதான சுங்க வரி சதவீதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு அதன் மீதான முதலீடுகள் அதிகரிப்பதோடு விலை குறையவும் வாய்ப்புள்ளது. எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தியாகவில்லை என்றாலும் இந்த பட்ஜெட் நடுநிலையாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஏமாற்றம் அளிக்கிறது
-எம்.பரமசிவம்,விவசாயி, கன்னிவாடி
ஏழை, நடுத்தர விவசாயிகளுக்கு ஏற்ற புதிய திட்டங்கள் சொல்லும்படியாக இல்லை. அதிகரித்து வரும் சிறுதானிய உணவு தேவைக்கேற்ப பயறு வகை விதையை விவசாயிக்கு கூடுதல் மானியத்தில் வழங்குவது, மார்கெட்டிங் செய்வதில் அரசு நேரடி கொள்முதல் நடவடிக்கை எடுத்திருக்கலாம். பாரம்பரிய காய்கறி சாகுபடி, விதை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கான திட்டங்கள் இல்லை. குளம், கண்மாய், நீர்தேக்கங்களை மேம்படுத்தி விவசாயத்திற்கு ஏற்ப பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையிலான திட்டங்கள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்ஜெட்.
-ஜெனிபர் ரஞ்சிதம், குடும்பத் தலைவி ஒட்டன்சத்திரம்
புற்றுநோய் மருந்துகளுக்கு 100 சதம் சுங்கவரி ரத்து, தங்கத்திற்கான சுங்கவரி குறைப்பு வரவேற்கத்தக்க அம்சங்கள் ஆகும். நான்கு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கோடி விவசாயிகளுக்கு பயிற்சி, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க 5 கோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு , உயர் கல்வி கடனுக்கான உச்சவரம்பு ரூ. 10 லட்சம், பணிபுரியும் பெண்களுக்கு விடுதி , குழந்தைகள் பாதுகாப்பு மையம் வரவேற்கத்தக்க அம்சம். ராணுவம் ஊரக வளர்ச்சிக்கு அடுத்து விவசாய வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்ஜெட்.
மகிழ்ச்சி அளிக்கிறது
-பாலசுப்பிரமணி, பொருளாளர் ,வணிகர் சங்க பேரமைப்பு , கொடைக்கானல்
தங்கத்திற்கான சுங்கவரி குறைப்பால் தங்கம் விலை குறைந்துள்ளது .சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மக்களின் அன்றாட பயன்பாட்டில் உள்ள அலைபேசி , உதிரி பாகங்களின் விலை குறைப்பு, வியாபாரிகளுக்கான முத்ரா கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 20 லட்சம் ஆக அதிகரிப்பு, தோல் ,ஆயத்த ஆடைகள் வரி குறைப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆண்டு வருமானம் ரூ. 15 லட்சத்தில் வருமான வரி 30 சதவீதம் என்பதை குறைக்க வேண்டும். தொழில் திறன் மேம்பாட்டுக்காக ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, வருமான வரி தாக்கல் செய்ய தாமதமானால் கிரிமினல் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பட்ஜெட் ஏழை ,நடுத்தர மக்களுக்கான வரவேற்கும் பட்ஜெட்டாக உள்ளது.
ஒரே நாளில் குறைந்த தங்கம்
-சித்ராமணி, குடும்பத் தலைவி, பழநி
இந்திய அரசில் ஏழாவது முறையாக ஒரு பெண் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வது பெருமைக்குரிய விஷயம். இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6810 ஆக இருந்தது. பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி குறைப்பு அறிவிப்பு வந்தவுடன் மதியம் ரூ. 6550 க்கு ஒரு கிராம் தங்கம் விற்கப்பட்டது.
ஒரே நாளில் ஒரு பவுனுக்கு ரூ. இரண்டாயிரத்திற்கு மேல் விலை குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். முத்ரா தொழில் கடனை ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது புதிய பெண் தொழில் முனைவோர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும். வெள்ளியின் விலையும் எதிர்வரும் நாட்களில் குறையும் என்பதால் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பட்ஜெட் உள்ளது.