Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அடிக்கடி மின்தடை...வனவிலங்குகளால் அச்சம்: பாச்சலுார் ஊராட்சியில் தொடரும் பாதிப்பு

அடிக்கடி மின்தடை...வனவிலங்குகளால் அச்சம்: பாச்சலுார் ஊராட்சியில் தொடரும் பாதிப்பு

அடிக்கடி மின்தடை...வனவிலங்குகளால் அச்சம்: பாச்சலுார் ஊராட்சியில் தொடரும் பாதிப்பு

அடிக்கடி மின்தடை...வனவிலங்குகளால் அச்சம்: பாச்சலுார் ஊராட்சியில் தொடரும் பாதிப்பு

ADDED : ஜூன் 08, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
தாண்டிக்குடி : கடைசிக்காடு, பேத்தரைப்பாறை, பாச்சலுார், பூதமலை, நடனங்கால்வாய், குரங்கனிப்பாறை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாச்சலுார் ஊராட்சியில் ரோட்டில் குவிக்கப்படும் குப்பை, அடிக்கடி மின்தடை, வனவிலங்குகள் நடமாட்டம், தெரு விளக்கு சரிவர எரியாத நிலை, கலங்களான குடிநீர், பழுதடைந்த பஸ் இயக்கம் என ஏராளமான பிரச்னைகள் உள்ளன.

பஸ்களில் குடை பிடித்து பயணம்


ஆறுமுகம், விவசாயி: பொட்டியாத்தா கிணறு முதல் தரை தொட்டி வரை பழைய குழாய்களை அகற்றி கருப்பு ஒஸ் மூலம் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டமைக்கப்படும் சாக்கடை பணி தரமற்று நடக்கிறது. ரோட்டில் குப்பையை குவிப்பதால் துர்நாற்றம், கொசுக்கள் அதிகரித்து சுகாதாரக் கேடாக உள்ளது. ஒட்டன்சத்திரம் பாச்சலுார் இடையே இயக்கப்படும் அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை. கூரை சேதத்தால் மழை காலங்களில் பயணிகள் குடை பிடித்து பயணிக்கும் அவலம் உள்ளது. தோட்டக்கலைத்துறை விவசாய சார்ந்த இப்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

கேள்விக்குறியான வாழ்வாதாரம்


முத்துராஜ், வியாபாரி : ஊராட்சியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சாரல் மழைக்கு மின்தடை ஏற்பட்டு சீர் செய்ய ஓரிரு தினங்களாகிறது. காட்டு மாடு, காட்டுப்பன்றி, காட்டு யானை விவசாயத் தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சேதமடைந்த ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும். மின்வாரியத்தில் ஒயர் மேன் இல்லாததால் மின் பழுதுகளை சீர் செய்வது பிரச்னையாக உள்ளது. அடிக்கடி பி.எஸ்.என்.எல்., அலைபேசி சேவை பழுதாவதால் தொலைதொடர்பு சேவை பாதித்துள்ளது.

குடிநீரால் நோய் தொற்று


லலிதா, கூலித்தொழிலாளி : 20 ஆண்டுகளுக்கு முன் கட்டமைக்கப்பட்ட 50க்கு மேற்பட்ட தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இவற்றை கட்டமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடை வசதி அறவே இல்லாத நிலையில் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. பஸ் ஸ்டாப் வசதியின்றி திறந்தவெளியில் காத்திருக்கும் நிலை உள்ளது. சப்ளை செய்யப்படும் குடிநீர் கலங்கலாகவும் மஞ்சள் நிறமாகவும் உள்ளதால் நோய் தொற்று அபாயம் உள்ளது.

நடவடிக்கை எடுக்கப்படும்


தயாநிதி, ஊராட்சித் தலைவர் : குடிநீர் சப்ளை நாள்தோறும் வழங்கப்படுகிறது. குழாய்களில் தேங்கும் பழைய தண்ணீர் மஞ்சள் நிறமாக துவக்கத்தில் வரும்.அதன் பின் சரியாகிவிடும். ரோட்டோர குப்பையை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடிக்கடி ஏற்படும் மின்தடை குறித்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. நிழற்குடை கட்டடம் எம்.எல்.ஏ., நிதியில் கட்டமைக்க கூறி உள்ளனர். நடனங் கால்வாய் ரோடு தற்போது தான் அமைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கைப்எடுக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us