/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிளாட்களாக மாறும் விளைநிலங்கள்: கவனிப்பால் கண்டுக்காத அதிகாரிகள் பிளாட்களாக மாறும் விளைநிலங்கள்: கவனிப்பால் கண்டுக்காத அதிகாரிகள்
பிளாட்களாக மாறும் விளைநிலங்கள்: கவனிப்பால் கண்டுக்காத அதிகாரிகள்
பிளாட்களாக மாறும் விளைநிலங்கள்: கவனிப்பால் கண்டுக்காத அதிகாரிகள்
பிளாட்களாக மாறும் விளைநிலங்கள்: கவனிப்பால் கண்டுக்காத அதிகாரிகள்
ADDED : ஜூலை 04, 2024 10:31 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் விளை நிலங்கள் பிளாட்களாக மாற்றப்படும் அவலத்தால் விவசாய பரப்பு சுருங்கி வருகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி , ஆடலுார், பன்றிமலை, பண்ணைக்காடு, சிறுமலை, நத்தம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகள் விவசாயத்தை சார்ந்த பகுதிகளாக உள்ளன.
சமீபமாக மாறிவரும் சீதோஷ்ண நிலையால் விவசாயம் பாதிப்படைந்து வருகிறது. வனவிலங்குகள் தொந்தரவு என விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி அவற்றை முறைகேடாக பண்ணை நிலம் என்ற போர்வையில் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.
இது போன்ற நிலை வில்பட்டி ஊராட்சி,பண்ணைக்காடு பேரூராட்சி , கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் சர்வசாதாரணமாக கையாளப்படுகிறது. 20 சென்ட் நிலத்திற்கு மேல் இருக்கும் நிலப்பரப்பை பண்ணை நிலங்களாக பதிவு செய்யும் செல்வந்தர்கள் அதில் ஆடம்பர பங்களாக்கள் , விடுதிகளை கட்டி வணிக நோக்கிற்கு பயன்படுத்திகின்றனர். இது போன்ற விளைநிலங்களில் பாறைகள் தகர்ப்பு, சோலை மரங்கள் அழிப்பு, கனரக இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை சமப்படுத்துதல் , சிமென்ட் ரோடு என அனுமதியற்ற பணி தாரளமாக நடக்கின்றன. இதை கண்காணிக்க வேண்டிய வருவாய், வனம், உள்ளாட்சி, பதிவுத் துறை கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கின்றன . ஏற்கனவே டி. கே. டி., பட்டா நிலங்கள் விற்பனையில் ஏற்பட்ட சர்ச்சையால் பதிவுத்துறை பதிவு செய்ததை தவிர்த்து உள்ளது. அதே சூழலில் இதற்கு மாற்றாக உள்ள பகுதிகளில் விவசாய நிலங்களை பிளாட்களாக பிரிக்கும் இவ்வகை புரோக்கர்கள் இவற்றை பண்ணை நிலங்கள் என்ற போர்வையில் முறைகேடாக விற்கும் போக்கு அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சூழலில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பண்ணை நிலங்கள் என்ற போர்வையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி விற்கப்படும் முறைகேடான பண்ணை நிலங்கள் குறித்து கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.