ADDED : ஜூன் 30, 2024 02:25 AM

தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வாழைகிரி பகுதியில் கடமானை வேட்டையாடிய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வாழைகிரியில் தனியார் பண்ணை விடுதி, உணவகம் உள்ளது. சில நாட்களுக்கு முன் விடுதி தோட்டத்தில் வேலியில் சிக்கியிருந்த 2 வயது கடமானை அங்கு பணிபுரியும் பணியாளர்கள் அடித்து கொன்று சமைத்து சாப்பிட்டுள்ளனர். மானை வேட்டையாடி உரிப்பது, சமைப்பது, சாப்பிடுவது போன்ற போட்டோக்கள் பரவின.
மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா தலைமையில் அதிகாரிகள் மான் வேட்டையில் ஈடுபட்ட வாழைகிரியைச் சேர்ந்த செல்வகுமார் 28, கன்னிவாடியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் 24, காமாக்காபட்டியைச் சேர்ந்த அஜித் 29, பண்ணைக்காட்டைச் சேர்ந்த சிவராமன் 27, சித்தரேவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் 45, மன்னார்குடியைச் சேர்ந்த பிரவீன் 24 ஆகியோரை கைது செய்தனர். மான் வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள், டிராக்டர், டூவீலர், மான் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
பண்ணை உரிமையாளர்கள் கூறும்போது, 'மான்வேட்டைக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. வனத்துறையிடம் நேரில் விளக்கம் அளிக்க உள்ளோம்' என்றனர்.