ADDED : ஜூலை 08, 2024 12:16 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் குப்பையை கொட்டுவதற்கு பலவித வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் போகிற போக்கில் ரோட்டோரங்களில் குப்பைகளை வீசி செல்வது தொடர் கதையாகிறது. தற்போது குப்பை கழிவுகளுடன் காய்கறி கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல்பாதிக்கப்படுவதுடன் சில நாட்களில் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பைகளில் வீசப்படும் கழிவுகளை உண்ணவரும் நாய்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன.
அப்படியே தீ வைத்து எரிக்கப்படுவதால் உண்டாகும் நச்சு புகை சுற்றுச்சூழலை பாதித்து சுவாசக் கோளாறை ஏற்படுத்துகிறது. பல இடங்களில் வடிகால் வாய்க்காலிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் கொட்டப்படுவதால் மழை நேரங்களில் வடிகாலுக்கு செல்ல வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. ரோட்டுப் பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.