/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரோடுகளில் சுற்றும் கால்நடைகள்; மவுனம் கலைக்குமா மாநகராட்சி ரோடுகளில் சுற்றும் கால்நடைகள்; மவுனம் கலைக்குமா மாநகராட்சி
ரோடுகளில் சுற்றும் கால்நடைகள்; மவுனம் கலைக்குமா மாநகராட்சி
ரோடுகளில் சுற்றும் கால்நடைகள்; மவுனம் கலைக்குமா மாநகராட்சி
ரோடுகளில் சுற்றும் கால்நடைகள்; மவுனம் கலைக்குமா மாநகராட்சி
ADDED : ஜூன் 04, 2024 06:22 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் சுற்றித்திரியும் மாடுகளால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் முதல் பாதசாரிகள் வரை அச்சத்தோடு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால் பலரும் மாடுகள் தாக்கி காயமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
திண்டுக்கல் பகுதியில் மாடுகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை முறையாக பராமரிக்காமல் ரோட்டில் சுற்றுவதற்கு அனுமதிக்கின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் மாடுகள் சுற்றித்திரிகின்றன.
மாடுகளுக்கு தேவையான உணவுகளை அதன் உரிமையாளர்கள் கொடுக்காததால் ரோட்டோரங்களில் தேக்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளுடன் உள்ள உணவுகளை உண்கின்றன. இதனால் மாடுகள் ஆங்காங்கே உடல் நலம் பாதிக்கப்பட்டு கிடக்கின்றன.
குறிப்பாக ஒருசில மாடுகள் குடியிருப்புகளில் புகுந்து உணவுகளை சாப்பிடும் நிலையும் அடிக்கடி நடக்கின்றன.
எந்நேரமும் ரோட்டில் சுற்றும் இவைகளால் வாகனங்களில் செல்லும் ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். ரோட்டின் குறுக்காக நடந்து செல்லும் கால்நடைகள் வாகனங்களை கண்டு ஒதுங்காமல் அப்படியே செல்வதால் விபத்துக்களும் நடக்கின்றன.
இதில் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒருசில மாடுகள் கோபமடைந்து வீதிகளில் செல்லும் பாதசாரிகளை முட்டி தாக்குகின்றன. இதனால் மாடுகளை பார்த்தாலே மக்கள் சற்று அச்சத்துடன் பயணிக்கும் நிலையும் உள்ளது.
கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் எப்போதாவது அத்தி பூத்தது போல் குழு அமைத்து பிடிக்கின்றனர். சிறிது நேரத்தில் பெரிய ஆட்களின் சிபாரிசுகள் வந்ததும் விடுவிக்கின்றனர். மீண்டும் அவைகள் ரோட்டில் மக்களை அச்சுறுத்தும் விதமாக சுற்றித்திரிகின்றன.
பொது மக்கள் இதுபற்றிய புகார்களை மாநராட்சி நிர்வாகத்திடம் கொடுக்கின்ற போதிலும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. தொடரும் இப்பிரச்னை மீது முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கட்டுப்படுத்தலாமே
கார்த்திக் வினோத், மாவட்ட தலைவர், பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு, திண்டுக்கல்: திண்டுக்கல் நகரின் முக்கிய பிரச்னையாக மாடுகள் உள்ளது.
ரோட்டின் இருபுறங்களிலும் தாறுமாறாக சுற்றும் இவைகளால் பலரும் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். நடந்து செல்லும் பாதசாரிகளையும் மாடுகள் உணவு கிடைக்காத கோபத்தில் முட்டி தாக்குகின்றன.
தொடரும் இப்பிரச்னையை தடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் வந்தால் மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர்.
மற்ற நேரங்களில் மவுனமாக உள்ளது தான் வேதனையாக உள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
புகார் கொடுத்துவிட்டேன்
கணேசன், மா.கம்யூ., கவுன்சிலர், திண்டுக்கல்: ஆர்.எம்.காலனி பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன.
இவைகளை அதன் உரிமையாளர்கள் கவனிப்பதே இல்லை. ரோட்டில் செல்லும் பொது மக்களை தாக்குகின்றன.
சமீபத்தில் ஆர்.எம்.காலனி பகுதியில் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை பசுமாடு ஒன்று முட்டி தாக்கியது.
இதில் சிறுவன் பலத்த காயம் அடைந்தான். இதுகுறித்து நான் ஏற்கனவே பல முறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்து விட்டேன்.
இன்னும் அவர்கள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. பெரும் விபத்துக்கள் ஏற்படும் முன் நடவடிக்கை தேவையாக உள்ளது.