ADDED : ஜன 25, 2024 10:04 AM
தர்மபுரி: தர்மபுரி, அரசு கலைக்கல்லுாரியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், பள்ளி மேலாண்மைக்குழு மாநாடு நடந்தது.
இதில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த, இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009ன் படி பள்ளி மேலாண்மைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவில், பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், தலைமையாசிரியர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கல்வியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் முக்கிய பணியாக, மாணவர் சேர்க்கை மற்றும் இடை நிற்றலை தவிர்த்தல், கற்றல் மேம்பாடு, மேலாண்மை, கூட்டமைப்பு ஆகியவை உள்ளது. மேலும், பள்ளியில் காலை மற்றும் மதிய உணவு சுவையாகவும், தரமானதாகவும் உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவ, மாணவியரின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து, குழுவில் உள்ளவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பின், சிறப்பாக பணியாற்றிய, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் ஆகியவற்றை, அவர் வழங்கினார். சி.இ.ஓ., ஜோதிசந்திரா உள்பட பலர் பங்கேற்றனர்.