Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்

தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்

தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்

தர்மபுரி மாவட்டம்: சில வரி செய்திகள்

ADDED : ஜூன் 11, 2024 01:58 PM


Google News

காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக கொடியேற்றம்

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் திருமண மண்டபத்திலுள்ள காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஜூன், 12) நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை, 9:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கோ பூஜை மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

இன்று (ஜூன், 11) காலை, 8:30 மணிக்கு, 2ம் கால யாக பூஜை, காமாட்சியம்மன் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஜூன், 12) காலை, 7:30 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் வனத்தில் பிளாஸ்டிக் குப்பை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும், 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலுக்கு வரும் சிலர், பாலிதீன் உள்ளிட்ட குப்பையை கொட்டிச் செல்கின்றனர்.

அவை வனப்பகுதியில் பல இடங்களில் சிதறி கிடக்கிறது. இதை அப்பகுதியிலுள்ள மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உண்ணும்போது உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, தீர்த்தமலை வனப்பகுதியில், குப்பை கொட்டாதவாறு தடுக்க, வனத்துறையும், பஞ்., நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருட்களில் கலப்படம் மக்களுக்கு விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் பஸ் ஸ்டாண்டில் வணிகர் சங்க பிரதிநிதிகள் முன்னிலையில், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர், உணவு பாதுகாப்பு நடமாடும் வாகனம் மூலம், உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவுப்பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து, எல்.இ.டி., தொடுதிரை மூலம், உணவு பொருட்கள் கலப்படம் கண்டறிதல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் டீ துாள், பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய், இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, வாகனத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

வெண்டைக்காய் விலை சரிவு

அரூர்: அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டார பகுதியில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: கடந்த, 5 நாட்களுக்கு முன், தனியார் மண்டியில், ஒரு கிலோ வெண்டைக்காய், 30 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதன்பின், விலை படிப்படியாக குறைந்து தற்போது, 8 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us