/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மஞ்சள் வணிகத்தில் சிறந்து விளங்கிய மஞ்சக்குப்பம் அந்த நாள் ஞாபகம்...நெஞ்சிலே வந்ததே... மஞ்சள் வணிகத்தில் சிறந்து விளங்கிய மஞ்சக்குப்பம் அந்த நாள் ஞாபகம்...நெஞ்சிலே வந்ததே...
மஞ்சள் வணிகத்தில் சிறந்து விளங்கிய மஞ்சக்குப்பம் அந்த நாள் ஞாபகம்...நெஞ்சிலே வந்ததே...
மஞ்சள் வணிகத்தில் சிறந்து விளங்கிய மஞ்சக்குப்பம் அந்த நாள் ஞாபகம்...நெஞ்சிலே வந்ததே...
மஞ்சள் வணிகத்தில் சிறந்து விளங்கிய மஞ்சக்குப்பம் அந்த நாள் ஞாபகம்...நெஞ்சிலே வந்ததே...
ADDED : ஜூன் 11, 2025 07:21 AM

கடலுார் மாநகரில், கூடலுார் எனப்படும் முதுநகர், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் ஆகியவை சேர்ந்த பகுதியாக புதுநகர் உள்ளது. மஞ்சக்குப்பம் இந்த நகரின் மூன்று பெரிய பிரிவுகளுள் ஒன்று. நதிக்கரைக்கு அருகில் உள்ள பகுதி மஞ்சக்குப்பம் என்று பெயரிடப்பட்டது.
இது 17ம் நுாற்றாண்டின் போது மஞ்சள் பயிரிடப்பட்டதால், இப்பகுதி 'மஞ்சள் குப்பம்' என்று அழைக்கப்பட்டது. வெளிநாடுகளுடன் மஞ்சள் வணிகம் நடந்த பகுதியாகவும் உள்ளது. புதுப்பாளையம் போலவே மஞ்சக்குப்பம் நகர்ப்பகுதியும் ஐரோப்பியர்களின் வருகைக்குப்பின் உருவானதே.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகர் நடுப்பெருவெளித்திடல் மஞ்சக்குப்பத்தில் தான் உள்ளது. இது மஞ்சக்குப்பம் மைதானம், கடலுார் மைதானம் என வரலாற்றுக்குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, மணிக்கூண்டு, பூங்கா, சொற்பொழிவு மேடை ஆகியவை இருந்தன. இதில் மக்கள் அமர்ந்து பொழுது போக்கும் இடமாக இருந்துள்ளது.
இதன் தென்கிழக்கில் லேடி ஆவீ மவுன்ட் கார்மல் சர்ச் என்னும் மாதா கோவில் உள்ளது. மைதானம் வடக்கே மாவட்ட நீதிமன்றம், சிறைச்சாலை, காவல்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகம், மாவட்ட மைய நுாலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ளன.
கலெக்டர் வசிப்பிடமான கார்டன் ஹவுஸ் இப்பகுதியில் அமைந்துள்ளது. கார்டன் ஹவுஸ் மற்றும் பெருந்திடலையும் ஆங்கிலேயர்கள் 1705ம் ஆண்டில் நிறுவினர். கார்டன் ஹவுஸ் 1733ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
ஆங்கிலேய கவர்னர் ராபர்ட் கிளைவ், கார்டன் ஹவுசில் வசித்தார். 1758ம் ஆண்டு லாலி என்னும் பிரெஞ்சுப்படை தளபதி, செயின்ட் டேவிட் கோட்டையுடன் சேர்த்து கார்டன் ஹவுசையும் தாக்கி சிதைத்தார்.
பிறகு இது புதுப்பிக்கப்பட்டு ஆங்கிலேய வணிகப் பேராளர்களின் வாழ்விடமாக சில காலம் இருந்தது. பின்னர் கலெக்டர் அலுவலகமாக மாறின. அடுத்தபடியாக உள்ள மாவட்ட நீதிமன்ற கட்டடம் 1866ல் கட்டி முடிக்கப்பட்டது.
இதன் பின்புறம் ஒரு குளம், குளத்தின் நடுவில் உருக்குலைந்த துாபி இருந்தது. அடுத்து மஞ்சக்குப்பம் பகுதியின் வடகிழக்கில் கர்னல் தோட்டம் என்ற பகுதி குறிப்பிடத்தக்கது. இங்கு ஆங்கில படைத்தலைவர் ஒருவர் தங்கியிருந்ததால் அந்த பெயர் பெற்றது.
இந்த இடத்தை 1852ம் ஆண்டு, புதுச்சேரி ரோமன் கத்தோலிக்க சபைத் துறைவி பொன்னாந்த் என்பவர் விலைக்கு வாங்கினார். பின், 1884ல் ஒரு உயர்நிலைப்பள்ளி நிறுவப்பட்டு, 1886ல் கலைக் கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டது.
ஆங்கிலேயர்களின் முதல் தலைநகரமாக விளங்கிய கடலுார் நகரத்தில், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் அவர்கள் காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக மாறின. 1800க்குப்பிறகு மாவட்டத்தின் முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் மஞ்சக்குப்பம் பகுதியிலேயே அமைக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவிலும் தென்னாற்காடு மாவட்டத்தின் தலைநகரமாக கடலுார் இருந்த போது, தென்னாற்காடு ஜில்லாவை மஞ்சக்குப்பம் ஜில்லா என்றழைக்கப்பட்ட பெருமை வாய்ந்த நகரமாக மஞ்சக்குப்பம் திகழ்ந்தது.