நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜன 03, 2024 12:28 AM

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா நடக்கும். இதில், மாசிமக தினத்தன்று பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், கோவில் அருகே உள்ள புண்ணிய தீர்த்தமாக கருதப்படும் மணிமுத்தாற்றில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.
இந்நிலையில், நடப்பாண்டு மாசி மக திருவிழா வரும் பிப்., 24ம் தேதி நடக்கிறது. ஆனால், ஆற்றில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து குளமாக தேங்கி நிற்கிறது.
இதனால், பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், மணிமுக்தாற்றை துாய்மைபடுத்தி கொடுக்க, மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையடுத்து, கடந்த 20ம் தேதி கலெக்டர் அருண் தம்புராஜ், மணிமுக்தாற்றில் ஆய்வு செய்தார்.
அப்போது, மணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருப்பதால் தண்ணீர் வெளியேற முடியாமல் உள்ளதாக, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் கலெக்டரிடம் தெரிவித்தார்.
உடன், பாலத்தின் தடுப்பு சுவர் பகுதிகளில் குழாய் அமைத்து தண்ணீரை வெளியேற்ற நெடுஞ்சாலை துறை அதிகரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால், கலெக்டரின் உத்தரவை நெடுஞ்சாலைத்துறையினர் ஒரு பொருட்டாக மதிக்காமல், இதுவரை தண்ணீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், உழவர் திருநாளன்று மணிமுக்தாற்றில் ஆற்று திருவிழா நடக்கும். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வர்.
ஆனால், இதுவரை ஆற்றில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ளதால், ஆற்று திருவிழா நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கலெக்டர் உத்தரவிட்டும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.