/உள்ளூர் செய்திகள்/கடலூர்/திட்டக்குடி அரசு கலைக் கல்லுாரியில் சேர்க்கை குறைவு: விடுதி வசதி இல்லாததால் மாணவர்கள் தயக்கம்திட்டக்குடி அரசு கலைக் கல்லுாரியில் சேர்க்கை குறைவு: விடுதி வசதி இல்லாததால் மாணவர்கள் தயக்கம்
திட்டக்குடி அரசு கலைக் கல்லுாரியில் சேர்க்கை குறைவு: விடுதி வசதி இல்லாததால் மாணவர்கள் தயக்கம்
திட்டக்குடி அரசு கலைக் கல்லுாரியில் சேர்க்கை குறைவு: விடுதி வசதி இல்லாததால் மாணவர்கள் தயக்கம்
திட்டக்குடி அரசு கலைக் கல்லுாரியில் சேர்க்கை குறைவு: விடுதி வசதி இல்லாததால் மாணவர்கள் தயக்கம்
ADDED : ஜூன் 15, 2024 05:57 AM

திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலைக் கல்லுாரியில் மைதானம், விடுதி வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியான திட்டக்குடியில் 2013ம் ஆண்டில் பல்கலைக்கழக உறுப்புக்கல்லுாரி துவங்க அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். தற்காலிகமாக திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டது. 2015ல், 7கோடியே 97லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டித்தரப்பட்டது. ஐந்து இளங்கலை பிரிவுகளுடன் துவங்கப்பட்ட இந்த கல்லுாரி தற்போது பி.ஏ.,தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி.,கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினிஅறிவியல், கணினி பயன்பாடு, பி.காம்., பி.காம்.,(சி.ஏ.), ஆகிய 10இளங்கலை பிரிவுகள் மற்றும் எம்.ஏ.,ஆங்கிலம், எம்.எஸ்.சி.,கணிதம், கணினிஅறிவியல், எம்.காம்., ஆகிய நான்கு முதுகலை பிரிவுகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இளங்கலை பிரிவில் 700மாணவர்கள் வரையிலும், முதுகலை பிரிவுகளில் 100மாணவர்கள் வரையும் ஆண்டுதோறும் சேர்க்கை நடைபெறுகிறது.
கல்லுாரி துவங்கிய 10ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பேராசிரியர்கள் பற்றாக்குறை, சுற்றுச்சுவர், மைதானம், போதிய கழிவறை வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் சேர்க்கை குறைவாகவே இருந்தது. முக்கியமாக கல்லுாரிக்கு விடுதி வசதி இல்லாததால், வெளிமாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்கள் சேர்வதற்கு தயக்கம் காட்டினர். இதனால் பாதியளவு சீட்கள் மட்டும் நிரம்பி, 50சதவீத சீட்கள் காலியாகவே இருக்கும் அவலநிலை காணப்படுகிறது.
கடந்த ஆண்டு கல்லுாரியில் சேர்ந்த மாணவிகள் சிலரை மட்டும், பிற்படுத்தபட்டோர் பள்ளி மாணவிகள் விடுதியில் தங்க வைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், சேலம், நாமக்கல், தென்காசி, விழுப்புரம், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
விடுதி வசதி இல்லாததால் கடந்த ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் சேர்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் மாணவர் சேர்க்கை முழுமை பெறாத நிலை உள்ளது. இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறுகையில், திட்டக்குடி அரசுக்கல்லுாரி துவங்கப்பட்டு 10ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் விடுதி வசதி ஏற்படுத்தப்படவில்லை. சுற்றுச்சுவர், மைதானம் போன்றவை கட்டமைக்கப்படவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வரும் மாணவர்கள் சேர்வதற்கு தயங்குகின்றனர்.
நடப்பாண்டிலேயே மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதி ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.