/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளி நுாற்றாண்டை கடந்து சாதனை சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளி நுாற்றாண்டை கடந்து சாதனை
சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளி நுாற்றாண்டை கடந்து சாதனை
சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளி நுாற்றாண்டை கடந்து சாதனை
சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளி நுாற்றாண்டை கடந்து சாதனை
ADDED : மே 31, 2025 11:51 PM

செட்டிநாட்டில் இருந்து வந்த 'திவான் பகதுார் ராமசாமி செட்டியார் அனைத்து தரப்பு மக்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், 1914ம் ஆண்டு, அக்., 4 ம் தேதி சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.
அப்போதே, சுமார் 20 லட்சம் செலவில், செட்டிநாடு அரண்மனை வடிவமைப்பில் பள்ளிக் கட்டடம் அமைக்கப்பட்டது. 1915ம் ஆண்டு டிச., 12ம் தேதி அன்றைய, ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட (கடலுார்) ஆட்சியர் கான்பகதுார்னி அசீசுதீன் சாஹேப் பகதுார் பள்ளியை திறந்து வைத்தார்.
நடுநிலைப் பள்ளியாக துவங்கிய பள்ளி, கடந்த 1916ம் ஆண்டில் 9ம் வகுப்பும், 1917ல் 10 வகுப்பும், 1918 ல் பிளஸ் 1ம் வகுப்பு துவங்கி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
முதல் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்த அச்சுத நாராயண அய்யர், துவங்கி இன்றைய தலைமை ஆசிரியராக உள்ள ஜெயராமன் வரை உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களும், சிறப்பான முறையில் பள்ளியை வழி நடத்தினர்.
பள்ளிக்காக, பெரிய விளையாட்டுத் திடலை அண்ணாமலை செட்டியார் அமைத்துக் கொடுத்தார். , தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதன், சி.பி. ராமசாமி அய்யர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சீனிவாச சாஸ்திரி, ஞானியார் அடிகள், சுத்தானந்த பாரதியார், சுவாமி சிற்பவானந்தர், பம்மல் சம்பந்த முதலியார், கிருபானந்த வாரியார், ம.பொ.சி., முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி ராஜா, அண்ணாதுரை மற்றும் பாரதிதாசன், தியாகி குமரி ஆனந்தன் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.
செட்டிநாடு அரச குடும்பத்துக்கு, தற்போது எத்தனையோ கல்வி நிறுவனங்கள் சொந்தமாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் தாயாக முதன் முதலில் தோன்றிய கல்வி நிறுவனம் ராமசாமி செட்டியார் பள்ளியாகும். 1958 ம் ஆண்டு 10ம் வகுப்பு அரசு பொது தேர்வில், அன்றைய சென்னை மாகாணத்தில், தமிழக அளவில், முதல் இடம் பெற்ற கண்ணன் என்ற மாணவரால், சிதம்பரம் பள்ளியை திரும்பி பார்க்க வைத்தவர்.
குறிப்பாக, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், பரந்து விரிந்து, உலக புகழ் பெற்று விளங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலில் 'மீனாட்சி கல்லுாரி' என்ற பெயரில், செட்டியார் பள்ளியில் தான் துவங்கப்பட்டது என்ற பெருமையும் இப்பள்ளிக்கு உண்டு.
கடந்த 1965ம் ஆண்டு பொன் விழா பள்ளியின், அப்போதைய தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் இருந்த காலம் பள்ளியின் பொற்காலமாகப் பொலிவு பெற்றது. காரணம், சுவாமிநாதன் தேசிய விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
அதே சமயம், மாநில அரசு வழங்கும் 'நல்லாசிரியர்' விருதும் அவரது பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. இரு விருதுகள் பெற்ற ஆசிரியர் என்ற பெருமை பெற்றதோடு, பள்ளிக்கு வந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ஆசிரியர் சுவாமிநாதன் தேசிய விருது பெற்றது குறித்து அறிந்து, ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மாநில அரசும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நடைமுறையை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மாணவர்கள், தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் என, பல துறைகளில் முக்கிய பொறுப்புகள் வகித்து வருகின்றனர். சிதம்பரத்தின் முக்கிய அடையாளமாகவும், பலரின் கல்வி கனவை நினைவாக்கிய பள்ளியாகவும் உள்ள பள்ளி தற்போது 1,173 மாணவர்களுடன் தனியார் பள்ளிக்கு இணையாக கல்வி கற்பித்து வருகிறது.
அரசியல் வாழ்விற்கு உதவியது
பள்ளி முன்னாள் மாணவரான, சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் கூறியதாவது:
சிதம்பரம் ராமசாமி செட்டியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர், முக்கிய பொறுப்புகளில் உயர்ந்த நிலையில் உள்ளனர். அந்த வகையில், இங்கு, படித்ததையே பெருமையாக நினைக்கிறேன். அதில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
மாணவர்களை நல்வழிபடுத்திய ஆசிரியர்களை இன்றும் நினைத்து பார்க்கிறேன். வாழ்க்கையில் பல விஷயங்களை பள்ளி கற்றுக் கொடுத்தது. எது நன்மை; தீமை என்று தெரியாத இளம் வயதில், பக்குவப்பட்டு, பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
பிந்தைய நாட்களில் அது என் அரசியல் வாழ்விற்கும் உதவியது. நகராட்சி சேர்மன், தி.மு.க., நகர செயலாளர் என பல பொறுப்புகள் இருந்தாலும், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என கூறிக் கொள்வதில் பெருமையாக நினைக்கிறேன். எனது வளர்ச்சிக்கு பள்ளி மிக முக்கிய காரணம்.
எத்தனை வயதானாலும், எத்தனை பொறுப்புகள் வந்தாலும், பள்ளியில் படித்த நினைவுகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
சாதனையாளர்களை உருவாக்கியது
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன் கூறியதாவது:
சிதம்பரம் நகருக்கு பெருமை சேர்க்கும் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலை பள்ளி நுாற்றாண்டை கடந்த ஒரு சிறந்த பள்ளி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ஆணிவேர் இப்பள்ளியாகும். பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்விகளில் மாணவ, மாணவிகள் 1,173 பேர் படிக்கின்றனர்.
பல சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், நீதிபதிகள், ஆட்சியாளர்கள், நிர்வாகிகள், கல்வியில் சிறந்த ஆசான்கள், பேச்சாளர்கள் என பல துறைகளில் சிறந்த சாதனையாளர்களை பள்ளி உருவாக்கியுள்ளது.
இதுதவிர பல சாதனை மாணவர்களை உருவாக்கி வருகிறோம். பள்ளியில் பயின்ற மாணவர்கள், இன்று, உலகம் முழுதும் சாதித்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட ஆசிரியர், பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சிதம்பரம் நகரிலேயே முதன் முதலில் காலை உணவு கொடுத்து, மாணவர்களின் பசி போக்கிய பள்ளி என்ற பெருமையை பெற்றது.
ஏழை, எளிய மாணவர்கள் அனைவருக்கும் கல்வி அளித்து வருகிறோம். என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம், என்.சி.சி., மற்றும் ஜே.ஆர்.சி., போன்றவற்றிலும் மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர்.
பணியாற்றியது பெருமை
நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்ற ஆசிரியர் என்.சி.சி.,அதிகாரி சுந்தரலிங்கம் கூறியாவது:
இப்பள்ளியில் பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன். ஏழை, எளிய மாணவர்களை கல்வி கற்க செய்தது மட்டுமின்றி, இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி கற்பித்து, சாதனை படைத்தது செட்டியார் பள்ளி.
விடுதி வசதி இருந்த காரணத்தால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் தங்கி கல்வி பயின்றனர். லாப நோக்கமின்றி மாணவர்களை படிக்க வைத்த கல்வி நிறுவனம். 21 ஆண்டுகள் என்.சி.சி., அதிகாரியாக பணியாற்றியதால், பல மாணவர்களுக்கு கல்வியுடன் கூடிய நல்லொழுக்கத்தையும் கற்பித்தேன். 2012ல் தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது.
திறமையான மாணவர்கள்
முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை தலைவருமான செல்வநாராயணன் கூறியதாவது: இப்பள்ளியில் கல்வி பயின்றது பெருமையாக உள்ளது. சாரணர் இயக்கம் மூலமாக சமூக சேவை மற்றும் தலைமை பண்புகளை மாணவர்களுக்கு வளர்த்த பள்ளி இது.
முத்தமிழ் வித்தகர்களாக மாணவர்களை உருவாக்க மாவட்ட கலைக்கழக போட்டிகளை நடத்தி பல பரிசுகளை வாங்கியது. சிறந்த விளையாட்டு மைதானம் மற்றும் தலைசிறந்த விளையாட்டு ஆசிரியர்கள் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கியது. ஒழுக்கம் மற்றும் நேர்மை பண்புகளை மாணவர்களிடையே வளர்த்ததது. அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக கருவாக இருந்தது இப்பள்ளி.