Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உள்ளூரில் விளையும் வாழை, பலா உழவர் சந்தையில் விற்க அனுமதிக்கப்படுமா?: தினம் தினம் போலீசாரிடம் மல்லு கட்டும் விவசாயிகள்

உள்ளூரில் விளையும் வாழை, பலா உழவர் சந்தையில் விற்க அனுமதிக்கப்படுமா?: தினம் தினம் போலீசாரிடம் மல்லு கட்டும் விவசாயிகள்

உள்ளூரில் விளையும் வாழை, பலா உழவர் சந்தையில் விற்க அனுமதிக்கப்படுமா?: தினம் தினம் போலீசாரிடம் மல்லு கட்டும் விவசாயிகள்

உள்ளூரில் விளையும் வாழை, பலா உழவர் சந்தையில் விற்க அனுமதிக்கப்படுமா?: தினம் தினம் போலீசாரிடம் மல்லு கட்டும் விவசாயிகள்

ADDED : ஜூன் 11, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
கடலுார்: கடலுார் உழவர் சந்தையில், உள்ளூரில் விலையும் வாழை, பலா விற்பனை செய்ய அனுமதிக்காததால், விவசாயிகள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக விற்பனை செய்யும் அவல நிலை தொடர்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மக்கள் நலத் திட்டங்களில், உழவர் சந்தை முக்கியமானது. இடைத்தரகர் இன்றி விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக மக்களிடம் சென்று சேர்ப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

உழவர்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றதால், கருணாநிதிக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவும் உழவர் சந்தையை முடக்கவில்லை.

தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்த பின்னர் உழவர் சந்தை புத்துயிரூட்டப்பட்டது.

அதன்படி கடலுார் உழவர் சந்தை புதுப்பிக்கப்பட்டது.

இங்கு, கடலுார் பகுதி கிராமங்களில் விளையக்கூடிய கத்தரி, வெண்டை, மிளகாய், அவரை, பூசணி, புடலை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் அனைத்து காய்கறிகளும் விளையாததால், உழவர் சந்தையில் பெரும்பாலான கடைகள் விவசாயிகளுக்கு இல்லாமல், வியாபாரிகள் தான் அதிகளவில் வியாபித்துள்ளனர்.

கடலுார் உழவர் சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி கிழங்கு வகைகள், பப்பாளி, கொய்யா உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள், மணிலா போன்றவையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல், கடலுார் பகுதி மலைக் கிராமங்களில் வாழை, பலா ஆகியன விளையும் நிலையில், இப்பழ சீசன்களில் உள்ளூரில் சந்தை படுத்த சரியான இடம் இல்லாததால், உழவர் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

ஆனால், அவர்களை உழவர் சந்தைக்குள் அனுமதிக்காததால் விவசாயிகள் வாழை மற்றும் பலா பழங்களை, உழவர் சந்தை எதிரில் சாலையிலேயே குவித்து வைத்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. இவைகளை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் சாலையிலேயே நிற்க வேண்டியுள்ளதால், பிசியான இச்சாலையில் (கடலுார் - சிதம்பரம் சாலை) வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து போலீசார் எவ்வளவு தான் சாலையில் வியாபாரம் செய்பவர்களை விரட்டி அடித்தாலும், சாலை வியாபாரம் நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது.

வாழை, பலா ஆகிய இரண்டும் இம்மாவட்ட விவசாயிகள் நிலத்தில் விளைகின்ற பொருட்கள் தான். எனவே இதையும் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாழை விவசாயிகளை உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதித்தால், தீராத போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விவசாயிகளும் பயனடைவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us