Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ரூ.255 கோடியில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கியது! சிதம்பரத்தில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு

ரூ.255 கோடியில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கியது! சிதம்பரத்தில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு

ரூ.255 கோடியில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கியது! சிதம்பரத்தில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு

ரூ.255 கோடியில், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கியது! சிதம்பரத்தில் குடிநீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு

ADDED : ஜூலை 05, 2024 05:12 AM


Google News
Latest Tamil News
புகழ் மிக்க நடராஜர் கோவிலை தன்னகத்தே கொண்ட, மிக தொண்மையான நகரம் சிதம்பரம், இங்குள்ள நகராட்சியும், மிக பழமையான நகராட்சி. சிதம்பரம் நகர மக்களின் குடிநீர் தேவையை தீர்க்க, கீழணையில் இருந்து ராஜன் வாய்க்கால் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், வக்காரமாரி என்ற இடத்தில் உள்ள, இரு குளத்தில் தேக்கப்பட்டும். அந்த தண்ணீர், சுத்திகரித்து, பில்டர் செய்யப்பட்டு, சிதம்பரம் நகராட்சி பகுதியில் விநியோகிக்கப்பட்டு தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

தண்ணீர் பற்றாக்குறை காலங்களில், நீர் தேவையை சமாளிக்கும் வகையில், நகரில் 3 இடங்களில் பெரிய அளவிலான போர்வெல் அமைக்கப்பட்டு குடி நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கால மாற்றம், மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் போதிய குடிநீர் வழங்குவதில் சிக்கல்கள் எழுந்தது. லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்து வந்தாலும், பற்றாக்குறை அதிகரித்து வந்தது.

இதனை தொடர்ந்து, சிதம்பரம் நகரமன்ற சேர்மனாக, செல்தில்குமார் பொறுப்பேற்ற பின், வேளாண் அமைச்சரிடம் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கூட்டு குடிநீர் திட்டம் தேவை என கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில், கொள்ளிடம் ஆதனுார் கூட்டு குடி நீர் திட்டம் தயார் செய்யப்பட்டது.

ரூ.255.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நகர்ப்புற அமைச்சர் நேரு, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர், கடந்த மார்ச் மாதம், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர். இத்திட்ட்டத்தின் மூலம், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதி, அண்ணாமலை நகர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகள், மற்றும் 10 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், தற்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் மெகா போர்வெல் போடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போர் போடும் பணி 50 சதவிகிதம் முடிந்துள்ளது. மேலும் ஆதனுாரில் இருந்து சிதம்பரம் வரை மெகா குடிநீர் பகிர்மான குழாய் புதைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அதே சமயம் சிதம்பரத்தில், பஸ் நிலையம், எல்லையம்மன் கோவில் தெரு ஆகிய இரு இடங்களில தரை மட்ட நீர்தேக்க தொட்டியும், நகராட்சி அலுவலகம் எதரில், வாகிசன் நகர் ஆகிய இரு இடங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

கூட்டு குடி நீர் திட்ட பணிகளின் முக்கியத்துவம் கருதியும், எதிர்கால நிலைகளை கருத்தில் கொண்டும், பணிகளை சரியான முறையிலும், தரமாகவும் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சேர்மன் செந்தில்குமார் கூறுகையில், சிதம்பரம் நகராட்சியில்,பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நகரில் உள்ள குளங்கள் துார் வாரப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு குளங்குள் துார் வார நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது குடி நீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், 255 கோடியில்,தொலைநோக்கு திட்டமாக, கொள்ளிடம் ஆதனுார் கூட்டுகுடி நீர் திட்டம் பணிகள் துவங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், அடுத்து 30 ஆண்டுகளுக்கு சிதம்பரத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டும், குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வழங்கமுடியும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us