Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள்... குவிகிறது; மாவட்டத்தில் விதிமீறல் தடுக்க கண்காணிப்பு தேவை'

வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள்... குவிகிறது; மாவட்டத்தில் விதிமீறல் தடுக்க கண்காணிப்பு தேவை'

வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள்... குவிகிறது; மாவட்டத்தில் விதிமீறல் தடுக்க கண்காணிப்பு தேவை'

வண்டல் மண் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பங்கள்... குவிகிறது; மாவட்டத்தில் விதிமீறல் தடுக்க கண்காணிப்பு தேவை'

ADDED : ஜூலை 10, 2024 04:53 AM


Google News
Latest Tamil News
ஏரி, குளம் மற்றும் கண்மாய்களில் வண்டல் மண் மற்றும் களிமண், இலவசமாக விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளும் திட்டம் துவக்கப்பட்டுள்து. நேற்று முன்தினம், முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைத்தார்.

அதையடுத்து, கடலுார் மாவட்டத்தில் உள்ள நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களில் களிமண், வண்டல் மண் இலவசமாக எடுத்துககொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேவைப்படுவோர், tnesevai.tn.gov.in என்ற இணைய தளத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இதனை சரிபார்க்கப்பட்டு, மண் எடுக்க அனுமதி வழங்க கலெக்டருக்கு பதிலாக அந்தெந்த தாலுக்கா தாசில்தார் மூலம் அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், அரசு கட்டுப்பாட்டில் 500க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன. வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் ஏரி, குளங்கள் மாவட்ட நிர்வாக அரசிதழில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு அனுமதி கோரும் நபர்கள், சிட்டா, அடங்கல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவை, அந்தந்த வி.ஏ.ஓ.,க்கள் மூலமாக தாசில்தார் சரிபார்த்து, பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது. மண்பாண்ட தொழிலுக்கு அனுமதி கோருவோரின் விண்ணப்பத்தை வி.ஏ.ஓ., பரிந்துரை மூலம் தாசில்தார் அனுமதிக்கலாம்.

பொதுவாக ஏரி, குளங்களில் 30 கன மீட்டர், 5 லோடு லாரிகள் (200 கன அடி அளவு) வரை வண்டல் மண் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கட்டணமின்றி எடுத்துக் கொள்ள முடியும். கடந்த காலங்களில் மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்களில் இரவு பகலாக அனுமதித்த அளவை விட ஆழமாக வண்டல் மண் அள்ளப்பட்டது. அதுபோல், விவசாய பயன்பாட்டிற்கு அனுமதி பெற்று, பிற பணிகளுக்கும் முறைகேடாக மண் அள்ளப்பட்டது.

மேலும், நீர்நிலைகளின் முகப்பு பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் அள்ளியதால், முகப்பு பகுதியில் மெகா சைஸ் பள்ளங்களாக மாறின. இது நீர்நிலைகளை பயன்படுத்தும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயத்தை அதிகரித்தது. இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் புகார்கள் வந்தும், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது, வண்டல் மண் அள்ளலாம் என்ற தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, ஒவ்வொரு தாலுகாவில் 60 முதல் 100 விண்ணப்பங்கள் வரை ஆன்லைனில் வந்து குவிந்துள்ளன. இவற்றை அந்தந்த வி.ஏ.ஓ.,க்கள் மூலமாக தாசில்தார்கள் சரிபார்த்து பரிந்துரை செய்யும் பணியை துவங்க உள்ளனர்.எனவே, நீர்நிலைகளை துார்வாரும் உயர்ந்த நோக்கத்திற்கு எதிராக விதிமீறலாக மண் அள்ளுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். அந்தந்த வி.ஏ.ஓ., மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தினசரி காலை, மாலை வேளைகளில் நீர்நிலைகளை கண்காணிக்க வேண்டும். விதிமீறும் நபர்களை போலீசில் புகார் தெரிவித்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றால் மட்டுமே பருவமழையை சேமிக்கும் வகையில் ஏரி, குளங்களை துார்வார முடியும். விவசாய மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு தேவையான வண்டல் மண் தடையின்றி கிடைக்கும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us