ADDED : ஜூன் 11, 2024 11:21 PM
விருத்தாசலத்தில் தொடர் திருட்டுகள் எதிரொலி காரணமாக, டி.எஸ்.பி., தலைமையிலான உட்கோட்ட க்ரைம் டீம் மீண்டும் உதயமானது.
மாசிமக திருவிழா விமர்சையாக நடக்கும் உட்கோட்ட எல்லையில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில், அந்த டி.எஸ்.பி., தலைமையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீசார் அடங்கிய க்ரைம் டீம் செயல்பட்டது. அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளான அந்த டீம், திடீரென கலைக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபகாலமாக ரயில் பாதையோர குடியிருப்புகள், பூட்டிய கடைகளை உடைத்து நகை, பணம், உடமைகள் திருடுவது அதிகரித்து வருகிறது. பழைய க்ரைம் டீம் கலைக்கப்பட்டதால், குற்றவாளிகளுக்கு குளிர்விட்டு போச்சு என போலீசாரே புலம்பினர். இருப்பினும் அந்தந்த ஸ்டேஷன் போலீசாரை வைத்து, ரோந்து பணி மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குற்றங்கள் பெருகுவதை தடுக்கும் வகையில், ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து போலீசார் அடங்கிய புதிய க்ரைம் டீம் அமைக்கப்பட்டுள்ளது. இனியாவது குற்றங்கள் குறைந்து, திருடுபோன நகைகள், பொருட்கள் மீட்கப்படுமா என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.