Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொகுதிக்கு ஒரு 'மினி ஸ்டேடியம்' இடம் தேர்வில் அதிகாரிகள் தீவிரம்

தொகுதிக்கு ஒரு 'மினி ஸ்டேடியம்' இடம் தேர்வில் அதிகாரிகள் தீவிரம்

தொகுதிக்கு ஒரு 'மினி ஸ்டேடியம்' இடம் தேர்வில் அதிகாரிகள் தீவிரம்

தொகுதிக்கு ஒரு 'மினி ஸ்டேடியம்' இடம் தேர்வில் அதிகாரிகள் தீவிரம்

ADDED : ஜூலை 25, 2024 05:56 AM


Google News
திட்டக்குடி: தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தார்.

அதன்படி, 234 சட்டசபை தொகுதிகளில் 61 தொகுதிகளில் ஸ்டேடியம் இருப்பதால், மீதமுள்ள 173 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதன்படி, கடலுார் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி உட்பட 22 தொகுதிகளில் தலா 3 கோடி ரூபாய் வீதம், 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியானது. இது விளையாட்டு வீரர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மூன்று கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் மினி ஸ்டேடியத்தில் 400 மீட்டர் ஓடுதளம், அலுவலகம், கேலரி, கைப்பந்து, வலைப்பந்து, கபடி, கோ கோ, கால்பந்து ஆடுகளங்கள், கழிவறை வசதியுடன் கட்டப்படும். இதன்மூலம் இளம் திறமையான இளம் விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடலுார் மாவட்டத்தில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக ஏற்பாடுகளில் விளையாட்டுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடலுாரில் அனைத்து வசதிகளுடன் பெரிய அளவிலான ஸ்டேடியம், விருத்தாசலத்தில் மினி ஸ்டேடியம் உள்ளது. தற்போது குறிஞ்சிப்பாடி தொகுதி வழுதலம்பட்டு ஊராட்சி மற்றும் பண்ருட்டி தொகுதி காடாம்புலியூரில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக பூர்வாங்க பணிகள் துவங்கி உள்ளது.

காட்டுமன்னார்கோவிலில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் தகுதியான இடத்தை தேடி வருகின்றனர். குறைந்த பட்சம் 5 ஏக்கர் அரசு நிலம், போக்குவரத்திற்கு ஏற்க பகுதியில் இருந்தால் ஸ்டேடியம் அமைக்க வசதியாக இருக்கும் என, விளையாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திட்டக்குடி மக்கள் கோரிக்கை

மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள திட்டக்குடி தொகுதியில் இருந்து பல்வேறு விளையாட்டு வீரர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். மிகவும் பின்தங்கிய இப்பகுதியில் முறையாக பயிற்சி பெற மைதானங்களும், பயிற்சி அளிக்க பயிற்சியாளர்களும் இல்லை. இதனால் விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்கள் கூட வழிதவறி சென்று விடுகின்றனர். எனவே, திட்டக்குடி பகுதி இளைஞர்கள் நலன்கருதி திட்டக்குடியில் மினிஸ்டேடியம் அமைக்க விளையாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us