கடலுாரில் தொடரும் கொலை சம்பவங்கள்
கடலுாரில் தொடரும் கொலை சம்பவங்கள்
கடலுாரில் தொடரும் கொலை சம்பவங்கள்
ADDED : ஜூலை 30, 2024 11:38 PM

கடலுாரில் கடந்த சில மாதங்களுக்கு ஊராட்சி தலைவியின் கணவர் மதியழகன், கடந்த ஜூன் 30ம் தேதி வண்டிப்பாளையத்தில் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் 35; மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். ஜூலை 7ம் தேதி தனது வீட்டு வாசலில் நின்றிருந்த பா.ம.க., முன்னாள் நகர செயலாளர் சங்கரை, மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்றனர்.
அடுத்து, கடந்த 19ம் தேதி கடலுார் அடுத்த காராமணிக்குப்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன், பேரன் என மூன்று நபர்கள் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டு, தீயிட்டு எரித்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள், கடந்த 28ம் தேதி திருப்பாதிரிபுலியூரை சேர்ந்த அ.தி.மு.க., வார்டு செயலாளர் பத்மநாபன் 48; பாகூர் அருகே ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன் தி.மு.க., பிரமுகர் பிரகாஷ் என்பவர் கத்தியால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டாக்கத்தியுடன், சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், இச்செயலில் ஈடுபட்டது.
மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 10க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டுகளில் மீனவர் கொலை, குப்பங்குளம் ரவுடி வீரா என பல தொடர் கொலைகள் நடந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் தான் ரவுடி வீராவை வெட்டி கொலை செய்த குப்பங்குளம் கிருஷ்ணனை, அப்போது இருந்த போலீஸ் அதிகாரிகள் என்.ை கவுண்டரில் சுட்டனர்.
அப்போது முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக கடலுார் பகுதியில் கொலை சம்பவங்கள் நடக்கவில்லை. அப்போது இருந்த போலீஸ் அதிகாரிகள் எடுத்த கடுமையான நடவடிக்கை தான் காரணம் என பொதுமக்கள் எண்ணுகின்றனர்.
மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா அதிக புழக்கத்தால் இளைஞர்கள் அடிமையாகி, அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் பல்வேறு குற்ற சம்வங்களில் ஈடுபடுகின்றனர்.
மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டதால், பொதுமக்கள் சாலையில் நடக்கவே அச்சமடைந்து வருகின்றனர். எனவே, கடலுார் மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தவும், கொலை சம்பவங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.