/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் எதிரணி பலவீனம் மீண்டும் வாகை சூடிய திருமாவளவன் சிதம்பரத்தில் எதிரணி பலவீனம் மீண்டும் வாகை சூடிய திருமாவளவன்
சிதம்பரத்தில் எதிரணி பலவீனம் மீண்டும் வாகை சூடிய திருமாவளவன்
சிதம்பரத்தில் எதிரணி பலவீனம் மீண்டும் வாகை சூடிய திருமாவளவன்
சிதம்பரத்தில் எதிரணி பலவீனம் மீண்டும் வாகை சூடிய திருமாவளவன்
ADDED : ஜூன் 05, 2024 12:18 AM
சிதம்பரம்: சிதம்பரம் (தனி) லோக்சபா தொகுதியில், கடலுார் மாவட்டத்தில், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் (தனி), அரியலுார் மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலுார் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது. தொகுதியில் பல்வேறு சமுதாயத்தினர் வசித்தாலும், வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.
திருமாவளவன், தற்போது தொகுதி எம்.பி.,யாக உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில் மீண்டும் களம் இறங்கினார். கடந்த தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகரை எதிர்த்து போட்டியிட்டு, மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில், (3,219 ஓட்டு) போராடி வெற்றி பெற்றார்.
எம்.பி., யாக வெற்றிபெற்று போனவர்தான், தொகுதி பக்கம் எட்டி பார்க்கவில்லை, தொகுதிக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை, மக்களை சந்திக்கவே இல்லை என்ற அதிருப்தி தொகுதி முழுக்க உள்ளது. இதனால், அவர் சிதம்பரத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை என, ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், சிதம்பரம் எனது தாய்மடி. இங்குதான் போட்டியிடுவேன் எனக்கூறி, மீண்டும் களத்தில் இறங்கினார். ஆனால், அவர் வெற்றி பெறவது கடினம் என, பரவலாக பேசப்பட்டது.
ஆனால், பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகியதால், பா.ம.க., மற்றும் த.மா.கா., கட்சிகளை தன் பக்கம் இழுத்து, பாஜ., கட்சி தனது வேட்பாளரான கார்த்திகாயினியை வேட்பாளராக நிறுத்தியது. தே.மு.தி.க., கூட்டணியுடன் அ.தி.மு.க., வும் தனது வேட்பாளராக சந்திரகாசன் என்பவரை களமிறக்கியது. அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் கூட்டணி பலமில்லை என்பதால், வி.சி., கட்சி வேட்பாளர்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.
சிட்டிங் எம்.பி., திருமாவளவன் மீது தொகுதியில் அதிருப்தி கடுமையாக இருந்தாலும், எதிரணி, ஒன்று சேராமல் வாக்கு வங்கியை பிரித்துக்கொண்டதால், தி.மு.க., வின் கூட்டணி பலம் கடுமையாக வெற்றியை தரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. மேலும், எதிரணி வேட்பாளர்களும் சொல்லிக்கொள்ளும் அளவில் பலம் இல்லாததும் அவருக்கு பலம் சேர்த்தது. அதுமட்டுமின்றி, கடலுார் மாவட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அரியலுாரில் மாவட்ட அமைச்சர் சிவசங்கர் ஆகியோரின் கடுமையான தேர்தல் பணியும் பலம் சேர்த்தது.
அதுமட்டுமின்றி, வி.சி., கட்சியின் மாநில துணை செயலாளர் ஆதவ் அர்ஜூன், பானை சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த விதம் மக்களை திரும்பி பார்க்க வைத்தது. மேலும், திருமாவளன் ஜாதிய கட்சி தலைவராக பார்க்கப்படுவதால், மாற்று கட்சியில் உள்ள ஆதிதிராவிடர்களின் ஓட்டுகள் அவருக்கு ஓரளவு கிடைத்தது.
இதுமட்டுமின்றி, தி.மு.க., அமைச்சர் பன்னீர்செல்வம், பா.ம.க., உள்ளிட்ட எதிரணியினர் மட்டுமின்றி, மாற்று ஜாதியினரின், பெருவாரியான ஓட்டுகளை திருமாவளவனுக்கு பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், எதிரணியினர் பிரிந்து போனது, ஆளும் கட்சி அமைச்சர்களின் தேர்தல் பணி, சமுதாய ஓட்டுகள் என, பல்வேறு காரணங்கள் திருமாவளவன் மீண்டும் சிதம்பரத்தில் வெற்றிபெற சாதகமாக அமைந்தது.