ADDED : ஜூன் 19, 2024 01:20 AM
விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில்கள் உள்ளன. இதில், விருத்தகிரீஸ்வரர் கோவிலின் பிரதான கிழக்கு கோபுர வாசலில் 50க்கும் மேற்பட்ட மேற்பட்ட ஆதரவற்றோர், பக்தர்களிடம் யாசகம் பெறுகின்றனர்.
மேலும் பஸ் நிலையம், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும் ஆதரவற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களிடம் உரிய விசாரணை நடத்தி, உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும்.
ஆதரவில்லாத நபர்களை காப்பகத்தில் சேர்த்து, மறுவாழ்வு தர வேண்டும்.
பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டோர் உடல்நலக்குறைவுடன் கோவில் வாசல், பஸ் நிலையம், பாலக்கரை உழவர் சந்தை ஆகிய இடங்களில் கேட்பாரற்று இறந்து கிடக்கின்றனர்.
இந்த சடலங்கள், நகராட்சி நிர்வாகம் சார்பில் மணிமுக்தாற்றில் அடக்கம் செய்யப்படுகிறது.
ஆதரவற்றோருக்கு உணவு, உடை, இருப்பிடம் தர வேண்டியது அரசின் கடமை. தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. அதற்கேற்ப, கலெக்டர் அருண் தம்புராஜ் தனிக்கவனம் செலுத்தி, ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.