ADDED : ஜூலை 03, 2024 05:42 AM

புவனகிரி வழியாக முக்கிய வடிகாலாக வெள்ளாறு ஓடுகிறது. பி.முட்லுாரில் துவங்கி, புவனகிரி, ஆதிவராகநத்தம், சேத்தியாத்தோப்பு வரையில், ஆற்றின் இரு கரை பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டு வயல் வெளியாகவும், வீடு உள்ளிட்ட கட்டங்களும் கட்டப்பட்டுள்ளது.
அரசியல் குறுக்கீடு காரணமாக, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு, முறைப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றினால், மழைகாலங்களில் தண்ணீர் தடையின்றி வடியவும், தண்ணீர் தேக்கி வைக்கவும் முடியும்.
மேலும், புவனகிரி பாலத்தில் இருந்து வெள்ளாறில் கருவை முட்புதற்கள் மண்டியுள்ளதுடன், கீழ்புவனகிரியில் இருந்து பாலக்கரை வரை சிலர் வீடுகளில் உள்ள கழிப்பறையில் இருந்து நேரடியாக குழாய் பதித்து கழிவுகளை வெள்ளாற்றில் விடுகின்றனர். இதனால், பன்றிகள் உழன்று துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
அத்துடன்மழை காலங்களில் சேத்தியாத்தோப்பு பகுதியில் இருந்து வரும் தண்ணீர் வடியாமல் தேங்கி பாதிப்பு ஏற்படுவதுடன், நிலத்தடி நீரும் மாசு படுகிறது.
எனவே, ஆற்றில் மண்டியுள்ள கருவை முட்காடுகளை அகற்றி நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சணையின்றி அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.