/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் பணிகள் தீவிரம்! மேம்படுத்தப்படும் குடிநீர் வினியோகம்ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் பணிகள் தீவிரம்! மேம்படுத்தப்படும் குடிநீர் வினியோகம்
ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் பணிகள் தீவிரம்! மேம்படுத்தப்படும் குடிநீர் வினியோகம்
ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் பணிகள் தீவிரம்! மேம்படுத்தப்படும் குடிநீர் வினியோகம்
ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் பணிகள் தீவிரம்! மேம்படுத்தப்படும் குடிநீர் வினியோகம்
ADDED : செப் 09, 2025 10:16 PM

பொள்ளாச்சி; சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு குறைந்த நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகிக்க,2.77 கோடி ரூபாய் மதிப்பில் குழாய் இணைப்பு பணிகள்மேற்கொள்ளப்படுகின்றன. பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அம்பராம்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்படுகிறது.
குறிப்பாக, மோதிராபுரம் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, பிராதான குழாய் வாயிலாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பிரஸ் காலனியில் உள்ள 2.25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; அருள்ஜோதிநகரில் உள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரப்பப்படுகிறது.
இருப்பினும், மோதிராபுரத்தில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல, 15 ஆண்டுகளுக்கு முன், பி.வி.சி. குழாய் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், தண்ணீர் அழுத்தம் காரணமாக அடிக்கடி உடைப்பு, கசிவு ஏற்பட்டு ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும், நாளொன்றுக்கு, இரு முறை மட்டுமே தண்ணீர் நிரப்ப முடிந்தது.
இதனால், குடியிருப்புகளுக்கு அதிக நாள் இடைவெளியில் குடிநீர் வினியோகிக்கும் சூழல் ஏற்பட்டது. குடிநீர் வினியோகத்தில் நிலவும் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மோதிராபுரத்தில் இருந்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு துருப்பிடிக்காத வார்ப்பு இரும்பு குழாய், அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: பேரூராட்சியில், 15 ஆண்டுகளுக்கு முன், 3 ஆயிரம் வீடுகள் மட்டுமே இருந்தன. தற்போது, வீடுகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றாற்போல், சீராக தண்ணீர் வினியோகிக்க முற்பட்டால், சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடையே அமைக்கப்பட்ட பி.வி.சி., குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது.
அதனை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது, 2.77 கோடி ரூபாய் மதிப்பில் துருப்பிடிக்காத வார்ப்பு இரும்பு குழாய் அமைக்கும் பணி நடக்கிறது. பணிகள் முடிந்ததும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நாளொன்றுக்கு மூன்று முறை வரை, தண்ணீர் நிரப்ப முடியும். குடியிருப்புகளுக்கு குறைந்த நாட்கள் இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.