/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் காட்டு யானைகள் கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் காட்டு யானைகள்
கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் காட்டு யானைகள்
கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் காட்டு யானைகள்
கூட்டமாக வந்து தண்ணீர் குடிக்கும் காட்டு யானைகள்
ADDED : செப் 21, 2025 11:17 PM

பெ.நா.பாளையம்; சின்னதடாகம் வட்டாரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வனத்துறையினர் கட்டி வைத்துள்ள தண்ணீர் தொட்டியில் கூட்டம், கூட்டமாக காட்டு யானைகள் வந்து நீர் அருந்தி செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கோவை வடக்கு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
காட்டு யானைகளின் வரவை கட்டுப்படுத்த, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அவை கிராமங்களுக்குள் புகுவதையும், வேளாண் பயிர்களை சேதப்படுத்துவதையும், முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.
கடந்த சில நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட யானைகள் சின்னதடாகம், பெரியதடாகம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. இவை வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
சின்னதடாகம் அருகே உள்ள வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மருதங்கரை கீழ்பதியில் உள்ள மூலக்காடு என்ற இடத்தில், 10 காட்டு யானைகள் மலைவாழ் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராம பகுதி அருகே வந்தது.
அங்கு வனத்துறையினால் வனவிலங்குகளுக்காக கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரை அருந்தின. பின்னர், அதே பகுதியில் சிறிது நேரம் சுற்றிய காட்டு யானைகள் மலையடிவாரம் நோக்கி சென்றன.
காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அவைகளின் தாகம் தீர்க்க, வனத்துறையினர் வன எல்லைகளில் கட்டி வைத்துள்ள தண்ணீர் தொட்டியில், தண்ணீர் நிரப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.