/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆராய்ச்சி இல்லாமல் பதவி உயர்வு வேண்டும் ஆராய்ச்சி இல்லாமல் பதவி உயர்வு வேண்டும்
ஆராய்ச்சி இல்லாமல் பதவி உயர்வு வேண்டும்
ஆராய்ச்சி இல்லாமல் பதவி உயர்வு வேண்டும்
ஆராய்ச்சி இல்லாமல் பதவி உயர்வு வேண்டும்
ADDED : செப் 11, 2025 11:10 PM

கோவை; யு.ஜி.சி., - ஐ.சி.ஏ.ஆர்., விதிகளில் இல்லாத, தேவையற்ற நிபந்தனையை விதித்து, பேராசிரியர் பதவி உயர்வை வழங்க மறுப்பதாகக் கூறி, கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இணை பேராசிரியர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தர்ணாவில் ஈடுபட்ட இணை பேராசிரியர்கள் கூறியதாவது:
பல்கலையில் உதவி பேராசிரியர்களாக நியமனம் பெறுபவர்கள், ஒவ்வொரு படிநிலையாகக் கடந்து இணை பேராசிரியர், பேராசிரியர் என பதவி உயர்வு பெறுவர். சி.ஏ.எஸ். எனும் மதிப்பீட்டு முறை பின்பற்றப்படுகிறது. 110 மதிப்பெண்களுக்கு ஆசிரியர்களின் தகுதி மதிப்பிடப்படும். பதவி உயர்வுக்கு 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, இதன் நிர்வாகத்துக்கு உட்பட்ட இணைப்பு கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் 320 இணை பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில், 20 பேர் தவிர மற்றவர்களுக்கு பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தராக கீதாலட்சுமி இருந்தபோது, ஒவ்வொரு விஞ்ஞானியும் ஆண்டுக்கு ஓர் ஆய்வறிக்கை 'நாஸ்' தரத்தில் 6 புள்ளிகளுக்கு மேல் சமர்ப்பிப்பது கட்டாயம் என புதிய விதிமுறை 2022ல் கொண்டு வரப்பட்டது.
இதை அப்போதே எதிர்த்தோம். அது, பதவி உயர்வில் எதிரொலிக்காது எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்த நிபந்தனை கட்டாயம் எனக் கூறி, பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது.
ஓராண்டுக்குள் ஓர் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பது இயலாதது. அந்த ஆய்வில் உண்மைத் தன்மை இருக்காது. 2.5 முதல் 3 ஆண்டுகள் தேவைப்படும். 320 பேரில் 20 பேர் மட்டும், அவசர கதியில் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
யு.ஜி.சி. மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக (ஐ.சி.ஏ.ஆர்.) விதிமுறைகளில், இப்படி ஒரு நிபந்தனை இல்லை. நாட்டின் வேறெந்த பல்கலையிலும் இந்த விதி பின்பற்றப்படுவதில்லை.
இந்த தேவையற்ற நிபந்தனையால், 100க்கு 90க்கு மேல் மதிப்பெண் பெற்ற இணை பேராசிரியர்கள் கூட, பதவி உயர்வு பெற முடியவில்லை. 300 இணை பேராசிரியர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
மாணவர்களின் கல்வி பாதிக்காத அளவுக்கு வகுப்புகள், தேர்வுகள் நடக்க ஒத்துழைப்பு தருகிறோம். இப்பிரச்னையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.