ADDED : ஜூன் 16, 2025 08:22 PM
வால்பாறை; வால்பாறைக்கு கோடை விடுமுறையில், அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்தனர். மழை பொழிவு இன்றி, குளுகுளு சீசன் நிலவியதை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக ரசித்தனர்.
இந்நிலையில், கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியது. இம்மாதம் முதல் வாரத்தில் பருவமழை தீவிரமடைந்தது. இதனால், ஆறு மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் வெளியில் செல்ல முடியாமல் சுற்றுலாபயணியர் ஏமாற்றமடைந்தனர்.
தங்கும்விடுதி உரிமையாளர்கள் கூறுகையில், 'வால்பாறையில் கோடை சீசன் நிறைவடைந்த நிலையில், தற்போது பருவமழை தீவிரமாக பெய்வதால் சுற்றுலா பயணியர் வருகையும் படிப்படியாக குறைந்துள்ளது.
மழை காரணமாக, வால்பாறை வந்துள்ள சுற்றுலா பயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். பருவமழையின் தாக்கம் குறைந்த பின், சுற்றுலா பயணியர் வருகை அதிமாக வாய்ப்புள்ளது,' என்றனர்.