/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுத்திகரித்த கழிவு நீர்; காடுகுட்டைக்கு கொண்டு வரும் திட்டம் முடங்கியது சுத்திகரித்த கழிவு நீர்; காடுகுட்டைக்கு கொண்டு வரும் திட்டம் முடங்கியது
சுத்திகரித்த கழிவு நீர்; காடுகுட்டைக்கு கொண்டு வரும் திட்டம் முடங்கியது
சுத்திகரித்த கழிவு நீர்; காடுகுட்டைக்கு கொண்டு வரும் திட்டம் முடங்கியது
சுத்திகரித்த கழிவு நீர்; காடுகுட்டைக்கு கொண்டு வரும் திட்டம் முடங்கியது
ADDED : ஜூன் 08, 2025 10:38 PM

கோவை; ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவு நீரை, 'பம்ப்' செய்து, காடுகுட்டையில் தேக்கும் திட்டம் முடங்கியுள்ளது. இத்திட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை அருகே செட்டிபாளையம் பகுதிகளில் குளம், குட்டைகள் நீர் வரத்தின்றி, பல ஆண்டுகளாகவே வறண்டுள்ளன. நிலத்தடி நீர் மட்டம், 1,500 அடிக்கு கீழே சென்று விட்டன. அதனால், பாதாள சாக்கடை திட்டத்தில் சுத்திகரிக்கும் கழிவு நீரை, 'பம்ப்' செய்து, குளம், குட்டைகளை நிரப்பினால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பிருக்கிறது என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதையேற்று, ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையம் அருகே, நொய்யல் கரையில் நீருந்து நிலையம் கட்டி, 125 எச்.பி., திறனுள்ள மோட்டார் பொருத்தப்பட்டது. பட்டணம் வழியாக, 5 கி.மீ., துாரத்துக்கு செட்டிபாளையம் அருகே உள்ள காடுகுட்டை வரை, இரும்பு குழாய் பதிக்கப்பட்டது.
மின் இணைப்பு வழங்காமல் இருந்ததால், அத்திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்தது. மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது.
2023 நவ.,4ல் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, இத்திட்டத்தை துவக்கி வைத்தார். பின், காடுகுட்டைக்கு நேரில் சென்று, சுத்திகரித்த நீர் வந்தடைந்ததை பார்வையிட்டார். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இம்மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை.
பாசன சபையினர் பராமரிக்காததால், அத்திட்டம் முடங்கியது. இதுதொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், விவசாயிகள் முறையிட்டனர். நீர் வளத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டது.
அதற்கு, காடுகுட்டை செட்டிபாளையம் ஊராட்சிக்கு சொந்தமானது; ஒண்டிப்புதுார் சுத்திகரிப்பு நிலையம் மாநகராட்சிக்கு சொந்தமானது. குழாய் பதித்து, மோட்டார் ரூம் கட்டிக் கொடுத்தது மட்டுமே நீர்வளத்துறை.
இத்திட்டத்தை பராமரிக்க வேண்டிய பொறுப்பு செட்டிபாளையம் பேரூராட்சியை சேர்ந்ததென விளக்கம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சுத்திகரித்த நீரை காடுகுட்டைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு, செட்டிபாளையம் பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. நீர்வளத்துறையில் இருந்து கடிதமும் வழங்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இத்திட்டம் முடங்கியிருக்கிறது.
மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் எழுந்துள்ளது.