/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில்கள் இயக்குவது குறித்த கோரிக்கை பட்டியல் நீளுது! அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடிவுரயில்கள் இயக்குவது குறித்த கோரிக்கை பட்டியல் நீளுது! அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு
ரயில்கள் இயக்குவது குறித்த கோரிக்கை பட்டியல் நீளுது! அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு
ரயில்கள் இயக்குவது குறித்த கோரிக்கை பட்டியல் நீளுது! அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு
ரயில்கள் இயக்குவது குறித்த கோரிக்கை பட்டியல் நீளுது! அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு
ADDED : மே 22, 2025 03:25 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தும் ரயில் சேவைகளை துவங்க வேண்டும்; கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் ஆலோசனை மேற்கொண்டனர். அதிகாரிகளை சந்தித்து, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்ற முயற்சிகளை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கம், கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கம், ஆனைமலை ரோடு ரயில் பயணியர் நலச்சங்கம், கோவில்பாளையம் ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், ரயில் ஆர்வலர்கள், ரயில் பயணியர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், தொழில்வர்த்தக சபை அரங்கில் நடந்தது.
பாலக்காடு கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அரசுக்கு கோரிக்கை வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
பொள்ளாச்சி கோட்டத்தில் ரயில் தேவைகள், வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாக ரயில் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும். கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் அல்லது கிணத்துக்கடவு தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் அமைக்க வேண்டும்.
பெங்களூரு - கோவை உதய் டபுள் டெக்கர் ரயிலை, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிக்க வேண்டும்.பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இரவு, 8:55 மணிக்கு கிளம்பும் ரயில், கோவைக்கு, 10:50 மணிக்கு சென்றடைகிறது. இதனால், திருச்செந்துாரில் இருந்து வருவோர், ரயில் பயணத்தை தவிர்த்து, பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.மேலும், பொள்ளாச்சியில் இருந்து கோவை - பெங்களூரு ரயிலுக்கு செல்வோர் இந்த ரயிலை பயன்படுத்தினால் சரியான நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயிலை இரவு, 8:20 மணிக்கு இயக்க வேண்டும். கோவைக்கு, ஒரு மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
பொள்ளாச்சி - சென்னை இடையே கிணத்துக்கடவு, ஈரோடு, சேலம் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும்.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பெட்டிக்கு தண்ணீர் நிரப்பும் கட்டமைப்பு, ரயில்வே பராமரிப்பு வசதிகள் (பிட் லைன்ஸ்) அமைக்க வேண்டும்.
எர்ணாகுளம் - பாலக்காடு மெமு பயணிகள் ரயிலை ஆனைமலை ரோடு ஸ்டேஷனில் நிறுத்தம் செய்து, பொள்ளாச்சி வரை இயக்க வேண்டும்.பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் பாலக்காடு - சென்னை - பாலக்காடு ரயிலுக்கு ஆனைமலை ரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தம் செய்ய வேண்டும்.
மாசாணியம்மன் கோவில் விசேஷ நாட்களில், மதுரையில் இருந்து ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் இயக்க வேண்டும்.ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனை, இரண்டு நடைமேடைகளுடன் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கோரிக்கைகளும் பலமுறை மனுக்களாக கொடுக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ரயில்வே ஸ்டேஷன் வளர்ச்சியை மனதில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு கோரிக்கையாக நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், பாலக்காடு கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில், பாலக்காடு கோட்ட மேலாளரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு, கூறினர்.