/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொடர்கிறது துாய்மை பணியாளர்களின் போராட்டம்! கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் கொடுக்க மறுப்பு தொடர்கிறது துாய்மை பணியாளர்களின் போராட்டம்! கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் கொடுக்க மறுப்பு
தொடர்கிறது துாய்மை பணியாளர்களின் போராட்டம்! கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் கொடுக்க மறுப்பு
தொடர்கிறது துாய்மை பணியாளர்களின் போராட்டம்! கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் கொடுக்க மறுப்பு
தொடர்கிறது துாய்மை பணியாளர்களின் போராட்டம்! கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் கொடுக்க மறுப்பு
ADDED : ஜூன் 11, 2025 09:50 PM

கோவை; 'கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும், சாக்கடை அடைப்பு நீக்கும் தொழிலாளர்களுக்கும் கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் மறுத்ததால், துாய்மை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடரும்' என, தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில், 3,442 துாய்மை பணியாளர்கள், 172 சூபர்வைசர்கள், 1,209 கொசு ஒழிப்பு பணியாளர்கள், 845 சாக்கடை அடைப்பு நீக்கும் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணிபுரிகின்றனர். இதில், குப்பை அள்ளும் பணி, சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.770 வழங்க வேண்டுமென, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று நாட்களாக, கோவை கலெக்டர் அலுவலகம் முன் துாய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சு நடத்த, மாநகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. துணை கமிஷனர்கள் குமரேசன், சுல்தானா, உதவி நகர் நல அலுவலர் பூபதி மற்றும் மண்டல உதவி கமிஷனர்கள் பங்கேற்றனர். எட்டு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் செல்வம், பன்னீர்செல்வம், ஜோதி, கார்த்தி, ஆறுமுகம், ரவி, சந்தானம், தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாகுபாடு பார்க்காமல், அனைத்து பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டுமென, தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
அதற்கு, 'நாளொன்றுக்கு, 680 ரூபாய் வீதம், மாதத்துக்கு, 20 ஆயிரத்து, 400 ரூபாய் வழங்கப்படும். இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் போக, 16 ஆயிரத்து, 500 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 20ம் தேதிக்குள் சம்பள சிலிப் வழங்கப்படும். பி.எப்., பணத்தை எடுப்பதற்கு தேவையான வசதி செய்து தரப்படும்' என, கமிஷனர் தெரிவித்துள்ளார். கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும் கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க, தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதற்கு, 'அத்தொழிலாளர்களுக்கான ஒப்பந்த நிறுவனத்தினர் வேறு; குப்பை அள்ளும் பணி செய்யும் நிறுவனத்தினர் வேறு. அவர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க, மூன்று மாதம் அவகாசம் வேண்டும். கூட்ட நிகழ்வுகள் தீர்மானங்களாக வழங்கப்படும்' என கமிஷனர் தெரிவித்தார்.
மதியம், 2:15 முதல் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை மாலை, 5:15 மணிக்கு முடிந்தது. தொழிற்சங்கத்தினரில் சிலர், அதிகாரிகள் கூறிய உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டனர். சில பிரதிநிதிகள் அதை ஏற்காததால், குழப்பமான சூழல் ஏற்பட்டது.
அதன் பின், கலெக்டர் அலுவலகம் முன் காத்திருந்த துாய்மை பணியாளர்கள் மத்தியில், பேச்சுவார்த்தையில் நடந்தது தொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகள் விளக்கினர்.
கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு செல்வம் கூறுகையில், ''துாய்மை பணியாளர்களாக எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. அனைவருக்கும் சமமாக கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி ரூ.770 வீதம் மாதந்தோறும், 23 ஆயிரத்து, 100 ரூபாய் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ., அட்டை வழங்குவதில்லை; மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவதில்லை.
இ.எஸ்.ஐ.,க்கு பணம் பிடிப்பதை நிறுத்தி விட்டு, முதல்வரின் காப்பீடு திட்டத்தில் துாய்மை பணியாளர்களை இணைக்க வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சாக்கடை அடைப்பு நீக்கும் தொழிலாளர்களுக்கும், கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.