ADDED : ஜூன் 27, 2025 09:25 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில் வழித்தடத்தில், 1914ம் ஆண்டு கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. இதன் வாயிலாக, பொதுமக்கள் பயணித்து வந்தனர்.
இந்த ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்ட பின், திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்நிலையில், கோவில்பாளையம், காளியண்ணன்புதுார் ஊராட்சியின் ஒருங்கிணைந்த ஐந்து கிளையின், 82வது வாராந்திர கிளை கூட்டத்தில், கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து, கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் சக்தி கேந்திர பொறுப்பாளர் தனபாலகிருஷ்ணன் கூறியதாவது:
கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை திறக்க வலியுறுத்தி வருகிறோம். இதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதால், கோவில்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் பயன்பெற முடியும்.
இங்கு ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தும், அனைத்து வழிமுறைகளையும் முன்னெடுத்து, மத்திய ரயில்வே நிர்வாகத்தை அணுகுவது என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரயில்வே ஸ்டேஷன் திறப்பதற்கான அவசியம் குறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்து அழுத்தம் கொடுக்க கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.