Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தென்னை விவசாயத்தை மேம்படுத்த கூடுதல் நிதி கேட்பு!

தென்னை விவசாயத்தை மேம்படுத்த கூடுதல் நிதி கேட்பு!

தென்னை விவசாயத்தை மேம்படுத்த கூடுதல் நிதி கேட்பு!

தென்னை விவசாயத்தை மேம்படுத்த கூடுதல் நிதி கேட்பு!

ADDED : செப் 01, 2025 07:26 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி:

'உலக தென்னை தினம் இன்று கொண்டாடும் சூழலில், தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி நிதி ஒதுக்க வேண்டும்,' என, தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை மரங்களின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயனுள்ளதாகவே உள்ளது. இதனால், கற்பக விருட்சம் என அழைக்கின்றனர்.

பல்வேறு வகையில் உதவும் தென்னைக்கு சிறப்பு சேர்க்க உலக தென்னை தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இச்சூழலில் தென்னையை மேம்படுத்த அரசுகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு தலைவர் சக்திவேல் கூறியதாவது:

தென்னை விவசாயம் இனிவரும் காலங்களில் இருக்குமா என சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. கேரள வேர் வாடல் நோய், வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு போன்ற பல்வேறு நோய்களினால், உற்பத்தியில் இழப்பு ஏற்படுவதுடன், தென்னை மரங்கள் அடியோடு காய்ந்து விடுகின்றன. இது குறித்து கோரிக்கை விடுத்தும் தீர்வு இல்லை.

தென்னை விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்துவரும் நிலையில், அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு தரம் இல்லாத தனியார் நிறுவனங்களின் இடு பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் இடுபொருட்களை தேவைக்கேற்ப வழங்க வேண்டும்.

அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் தென்னை நுண்ணுாட்டங்கள் மானிய விலையில் வழங்க வேண்டும்.மத்திய வேளாண் அமைச்சகம், தேசிய தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியும், வாரியம் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் நிதியும் குறைவாகவே உள்ளது.

தென்னை சாகுபடியை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கி, அதிகப்படியான திட்டங்களை அனைத்து விவசாயிகளும் முழுமையாக பயன்பெறும் வகையில் தென்னை வளர்ச்சி வாரியமே நேரடியாக செயல்படுத்த வேண்டும்.

தென்னை வளர்ச்சி வாரியம் வழிகாட்டுதலுடன் தமிழகம் முழுவதும் துவங்கப்பட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து, வழிகாட்டுதல் மற்றும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

அகில இந்திய அளவில், ஒன்பது வாரிய உறுப்பினர்களை (விவசாய பிரதிநிதிகள்) இதுவரை நிரப்பாததால், விவசாயிகளின் கோரிக்கைகளை தென்னை வளர்ச்சி வாரிய கூட்டங்களில் தெரிவிக்க இயலவில்லை.

அனைத்து விவசாயிகளும் நீரா உற்பத்தி செய்ய இயலாத சூழல் உள்ளது. தமிழக அரசு நீரா உற்பத்திக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும். அத்துடன் நீரா பானத்துக்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினார்.

'கோக்கனட் கிளஸ்டர்' என்னாச்சு!

பொள்ளாச்சியில் தென்னை விவசாயம், தென்னை சார்பு தொழில்களை ஊக்கப்படுத்தவும், பாதுகாக்கவும் தேசிய தோட்டக்கலை வாரியம், பொள்ளாச்சி கோக்கனட் கிளஸ்டர் அமைத்து, 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள மாநில அரசு சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்தும் திட்டங்களை, மத்திய, மாநில அரசுகள் அதிகப்படியாக செயல்படுத்த வேண்டும். தென்னையில் ஊடுபயிராக பாக்கு, கோகோ, ஜாதிக்காய், வாழை சாகுபடி செய்ய ஆர்வமாக உள்ள விவசாயிகளுக்கு, ஊடுபயிர் செய்வதற்கான நாற்றுகள், தொழில்நுட்பங்கள் மற்றும் இதற்கான நிலையான சந்தை வாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும், என, விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us