Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ADDED : செப் 21, 2025 11:01 PM


Google News
Latest Tamil News

கட்சிக்குள்ள கோஷ்டி பூசலால சிக்கல்; த.வெ.க.,வுக்கு தாவும் இளைஞர்கள்

வால்பாறையில, தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள்ல இருக்கற கோஷ்டி பூசலால் தேர்தலை எதிர்கொள்ளவதில் சிக்கல் ஏற்பட்டிருக்குனு, டீ கடையில் இருவர் பேசிக்கொண்டதை கவனித்தேன்.

வால்பாறையில போன வாரம் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவுல, சிலைக்கு மாலை போட தனித்தனி கோஷ்டியா வந்தாங்க. தி.மு.க., நகர செயலாளர் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் நகராட்சி தலைவர் தலைமையில் மற்றொரு கோஷ்டியும் தனித்தனியா வந்தாங்க.

இதே போல, அ.தி.மு.க., நகர செயலாளர் தலைமையில ஒரு அணியாகவும், தொழிற்சங்க தலைவர் தலைமையில மற்றொரு அணியும் தனித்தனியா போய், சிலைக்கு மாலை அணிவித்தாங்க.

தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சியிலும் சில ஆண்டுகளாகவே இரு கோஷ்டியா செயல்படுறாங்க. கோஷ்டி பூசலால் கட்சி பலவீனமடைந்து வருவதோடு, சட்டசபை தேர்தலில் ஓட்டு சேகரிப்பது பாதிக்கும்னு அவங்க கட்சிக்காரங்களே புலம்பறாங்க.

இவங்களோட கோஷ்டி சண்டையால, த.வெ.க., பக்கம் இளைஞர்கள் எல்லாம் போறாங்கனு பேசிக்கிட்டாங்க.

குளம், குட்டையெல்லாம் மாயமாகுது; பெட்டிஷன் போட்டும் பலனில்லை

உடுமலை, ஜல்லிபட்டி நால்ரோட்டிலுள்ள குளத்து கரையில் விவசாயிகள் தீவிரமாக விவாதித்து கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...

மெயின்ரோடு பக்கத்துல இருக்கறதால ஆலங்குளம் தப்பியிருச்சு. ஏம்பா நம்மூருல இருக்குற மத்த குளம், குட்டைக்கு என்னாச்சு என ஒருவர் கேட்டார்.அதற்கு மற்றொருவர், மலையடிவாரத்துல, மழை தண்ணீரை சேகரிக்க இருந்த குட்டைகள் எல்லாம் மாயமாகுது.

அரசுப்பணிகளுக்காக அனுமதி வாங்கிட்டு, எந்த விதிமுறையும் பின்பற்றாம இரவு நேரத்துல, நுாற்றுக்கணக்கான லோடு மண் அள்ளிட்டு போறாங்க. சீதாகுட்டை உள்ளிட்ட குட்டைகளில் பாறை தெரியற அளவுக்கு மண்ணை அள்ளிட்டாங்க.

விவசாயிகள் கேட்டா எவ்வித பதிலும் சொல்றது இல்லை. இப்படியே போச்சுனா மலையடிவாரத்துல நிலத்தடி நீர்மட்டம், ஆயிரம் அடிக்கு கீழே போயிரும்.

நாள்தோறும் நுாற்றுக்கணக்கான லாரிகள் போயிட்டு வர்றதால, கிராமப்புற இணைப்பு ரோடு குண்டும், குழியுமா மாறி, யாரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிடுச்சு. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், ஒவ்வொரு குட்டையிலும் எந்தளவு மண் அள்ள அனுமதி கொடுத்திருக்குன்னு வெளிப்படையாக அறிவிக்கணும்.

இல்லாட்டி, பெரும்பாலான குளம், குட்டை மட்டுமல்லாது கிராம ரோடுகளும் காணாமல் போயிரும். இது சம்பந்தமா பல முறை பெட்டிஷன் போட்டும் நடவடிக்கை எடுக்கல. எல்லாரும் சேர்ந்து, தாலுகா ஆபீசு முன்னாடி போராட்டம் நடத்தினாதான் தீர்வு கிடைக்கும்னு பேசிக்கிட்டாங்க.

மரத்த வெட்டினவங்களுக்கு அபராதம்; ஆளுங்கட்சிய கலங்கடிச்சுட்டாங்க

பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்ப, 'அனுமதியின்றி மரம் வெட்டினதுக்கு அபராதம் போட்டுட்டாங்க தெரியுமா,' எனக்கேட்டார். என்ன விஷயம்னு விசாரிச்சேன்.

டி.கோட்டாம்பட்டி அம்மணீஸ்வரர் கோவில்ல, வருவாய்துறை அனுமதிஇல்லாம, ஜன., மாசம் வேப்பமரத்தை வெட்டினாங்க. அப்ப இருந்த அறங்காவலர் குழு தலைவரு வெட்டியதாக புகார் எழுந்தது. ஒன்னரை லட்சம் விலை போகக்கூடிய மரத்த, அஞ்சாயிரம் ரூபாய்க்கு மதிப்பிட்டதா புகார் சொன்னாங்க. இது குறித்து சப் - கலெக்டரிடமும் மரங்கள் பாதுகாப்பு அமைப்பு, உள்ளிட்ட பலர் மனு கொடுத்தாங்க.

நடந்த விசாரணையில, அறங்காவலர் குழு தலைவராக இருந்தவர் மரத்தை அனுமதியின்றி வெட்டியது உறுதியாயிருச்சு. அபராதமா, ஏழாயிரம் ரூபாய் கட்டவும், 15 நாட்களுக்குள் தொகையை செலுத்தி சீட்டை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டாரு.

மேலும், வெட்டப்பட்ட மரத்தை உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி பொது ஏலம் நடத்தி அறிக்கையை, 30 நாட்களுக்குள்ள வழங்கணும்னு உத்தரவிட்டிருக்காரு.

நாமெல்லாம் ஆளுங்கட்சிக்காரங்க... ஒன்னும் நடக்காதுனு நெனச்சிட்டு இருந்தாங்க. ஆனால், வேற மாதிரி ஆயிருச்சு. இனி அனுமதியின்றி மரம் வெட்டுறவங்களுக்கு இது ஒரு பாடமாயிருச்சுனு, சொல்லி முடித்தார்.

பெருமாள் கோவில் சொத்த வித்துட்டாங்க; ஹிந்து அமைப்பினர் போராட போறாங்க!

கிணத்துக்கடவு பக்கத்துல இருக்கிற வடசித்தூருக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு வந்த நண்பர், பெருமாள் கோவில் பிரச்னை பத்தி பேச ஆரம்பித்தார். என்னன்னு விசாரிச்சேன்.

வடசித்துார் பெருமாள் கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல இருக்குது. இந்த கோவிலுக்கு சொந்தமா, 10.5 ஏக்கர் நிலம் இருக்குது. இந்த நிலத்தை காலங்காலமா குத்தகைக்கு எடுத்துட்டு இருந்தவங்க சிலர், இப்போ அங்க நிலத்தை சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க.

குத்தகைக்கு எடுத்தவங்களோட சொந்தக்காரங்க பெயரிலேயே பத்திர பதிவும் பண்ணியிருக்காங்க. இத பத்தி கலெக்டர் வரைக்கும் மனு கொடுத்தாச்சு. இப்போ வரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்திருக்காங்கனு தெரியல.

இந்த விஷயமெல்லாம் இப்போ, ஹிந்து அமைப்புகள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. கூடிய சீக்கிரமா வடசித்தூர் பகுதியில போராட்டம் நடக்க திட்டம் போட்டிருக்காங்க.

எப்படியோ ஒரு வழியா, இந்த கோவில் நில பிரச்னைய முடிச்சு, கோவில்ல ஒரு ஸ்பெஷல் பூஜை நடத்திட்டா எல்லாம் சரியாயிடும்னு சொல்லிட்டு, நண்பர் கிளம்பினார். அங்கிருந்து, நானும் கிளம்பினேன்.

ஜி.எச்., டூட்டி டாக்டர் இருக்கறதில்ல; கையெழுத்துக்கு காத்திருக்கும் போலீஸ்


பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவுல, நண்பரை சந்தித்தேன். நம்ம ஊரு அரசு மருத்துவமனையில சாயங்கால நேரத்துல டூட்டி டாக்டர் இருக்கறதில்லனு, விஷயத்த சொல்ல ஆரம்பிச்சாரு.

பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில, அவசர சிகிச்சை பிரிவு செயல்படுது. இங்கு, நிரந்தர டாக்டர்கள் எப்போதும் பணியில் இருக்கணும். ஆனா, சாயங்காலம் 6 மணியில இருந்து, ராத்திரி 9 மணி வரைக்கும் டூட்டி டாக்டர்கள் யாரும் பணியில இருப்பதில்ல. பயிற்சி டாக்டர்கள் தான் இருக்காங்க.

அந்த நேரத்துல, குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுவோரை பரிசோதிப்பது, கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக குற்றவாளிகளோட உடல் நிலைய பரிசோதிப்பது போன்ற பணிகள் எல்லாம் பாதிக்குது. டூட்டி டாக்டர் வரும்வரை போலீஸ்காரங்க காத்துக் கிடக்க வேண்டியிருக்கு. டூட்டி டாக்டர் கையெழுத்து போட்டா தான், உரிய நேரத்தில் குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியும் என்பதால போலீசார் செய்வதறியாது தவிக்கறாங்க.

இந்த பிரச்னைய எஸ்.பி., மூலமா, சுகாதாரத்துறைக்கு தெரிவிச்சு, தீர்வு காண வேண்டும்னு போலீஸ்காரங்க பேசிக்கிறாங்கனு, சொன்னார்.

மலைய உடைக்கறாங்க... 'கப்பம்' வாங்கிட்டு காவல் இருக்காங்க!


உடுமலை தாசில்தார் ஆபீஸ்ல, சுற்றுச்சூழல் ஆர்வலரா இருக்கற நண்பரை சந்திச்சேன். அவர் சொன்னதில் இருந்து... உடுமலை அருகே, 3 ஆயிரம் ஏக்கர் பரப்புல ஜம்புக்கல் மலை இருக்கு. இந்த மலைய தனியார் ஆக்கிரமித்து, பாறைய வெடி வைத்து உடைத்து, மரங்களை வெட்டி, பசுமையான மலையை அழிச்சுட்டு இருக்காங்க. சமதள பரப்பில் அனுபவ பட்டா அடிப்படையில் விவசாயம் செய்தும், ஆடு, மாடுகள் மேய்க்கற விவசாயிகளையும் ஜம்புக்கல் மலைப்பகுதிக்குள்ள நுழைய விடாம தடுக்கறாங்க. அரசுக்கு சொந்தமான மலைய அழிக்கறத தடுக்க விவசாயிகள் போராட்டம் நடத்தியும், வனத்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் போலீசார் என, யாருமே கண்டுக்கல. எல்லாருமே ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக இருக்காங்கலாம். இப்ப, கனரக இயந்திரங்களை கொண்டு வந்தும், சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கொண்டும் மலைய துாள் துாளா உடைக்கறத புகார் கொடுத்தாலும், 'நாங்கள் என்ன செய்யறதுனு' அதிகாரிக அலட்சியமா பதில் சொல்லறாங்க. ஆவேசமடைந்த விவசாயிகள், தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியதோடு, வாகனங்களை பறிமுதல் செய்யணும், அத்துமீறுவோரை கைது செய்யணும்னு கோரிக்கை விடுத்தாங்க. ஆனா, பல லட்சம் ரூபா மதிப்புள்ள இயந்திரங்கள பறிமுதல் செய்யக்கூடாதுனு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமா, அதிகாரிகள் 'ரகசிய டீலிங்' பேசி, ராத்திரியோடு ராத்திரியா கனரக இயந்திரங்களை சமவெளிக்கு இறக்கிட்டாங்க. விடிஞ்சதும் மலைய உடைக்கற கனரக வாகனங்கள அதிகாரிக பறிமுதல் செய்வாங்க, ஏதாவது நடவடிக்கை எடுப்பாங்கனு எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால, கரை படிந்த அதிகாரிகள கலங்கடிக்கற மாதிரியும், அரசாங்கத்தோட கவனத்த ஈர்க்கற மாதிரியும் போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருக்காங்கனு, விவரமா சொன்னார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us