/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விருந்தீஸ்வரர் கோவில் சர்ச்சை அறிவிப்பு பலகை அகற்றம் விருந்தீஸ்வரர் கோவில் சர்ச்சை அறிவிப்பு பலகை அகற்றம்
விருந்தீஸ்வரர் கோவில் சர்ச்சை அறிவிப்பு பலகை அகற்றம்
விருந்தீஸ்வரர் கோவில் சர்ச்சை அறிவிப்பு பலகை அகற்றம்
விருந்தீஸ்வரர் கோவில் சர்ச்சை அறிவிப்பு பலகை அகற்றம்
ADDED : செப் 18, 2025 10:27 PM
கோவை; கோவையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில், இந்து மத பாரம்பரிய கலாசாரங்களுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகை, கலெக்டர் உத்தரவையடுத்து, நேற்று அப்புறப்படுத்தப்பட்டது.
கோவை அருகே துடியலுாரை அடுத்த கே.வடமதுரையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் விருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில், 'மேளதாளங்கள், சிவவாத்தியம், உடுக்கை, துடும்பு, தாரை தப்பட்டை, செண்டை மேளம், ஜமாப், சங்கு சேகன்டி ஆகியவற்றை கோவில் வளாகத்தில் இசைக்கக் கூடாது' என, செயல் அலுவலர் ஷாலினி, குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, கலெக்டர் பவன்குமாரிடம், விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு மாநகர் மாவட்ட அமைப்பாளர் ஞானசம்பந்தம் மனு கொடுத்தார். அதில், 'இந்துக்களின் பாரம்பரியம், கலாசாரத்தின் அடிப்படையில் காலம் காலமாக பூஜைகளின் போது மங்கள வாத்தியங்கள் இசைப்பது வழக்கம். அதற்கு அறநிலையத்துறை அதிகாரி தடை விதித்தது இந்துக்களின் உரிமைகளுக்கு எதிரானது. இறைவனுக்கான தாலாட்டு கூட இசையாலே இசைக்கப்படுகிறது. ஆன்மிகத்தில் கலந்தது இயல், இசை நாடகம். இது இந்துக்களின் பண்பாடு; அதற்கு தடை விதிக்கக்கூடாது' என, கூறியிருந்தார்.
ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த கலெக்டர், விருந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி, அந்த அறிவிப்பு பலகை நேற்று அகற்றப்பட்டது.