Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்புக்கு 'இலவு காத்த கிளி போல' காத்திருப்பு! விரைவில் நல்லசேதி வெளியாகுமென நம்பிக்கை

பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்புக்கு 'இலவு காத்த கிளி போல' காத்திருப்பு! விரைவில் நல்லசேதி வெளியாகுமென நம்பிக்கை

பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்புக்கு 'இலவு காத்த கிளி போல' காத்திருப்பு! விரைவில் நல்லசேதி வெளியாகுமென நம்பிக்கை

பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்புக்கு 'இலவு காத்த கிளி போல' காத்திருப்பு! விரைவில் நல்லசேதி வெளியாகுமென நம்பிக்கை

ADDED : மார் 24, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி : திராவிட கட்சிகள், அரசியல் செய்வதற்காக மாவட்ட அறிவிப்பை, தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதனால், பொள்ளாச்சி மக்கள், மாவட்டம் எப்போது உருவாகும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பொள்ளாச்சி, 1857ல் சப் - கலெக்டர் தலைமையில் இயங்கும் வருவாய் கோட்டமாக இருந்தது. கோட்டத்தில், திருப்பூர், உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தாலுகாக்கள் இருந்தன.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இருந்த திருப்பூரை பிரித்து, உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து கடந்த, 2008ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு அப்போது, உடுமலை, மடத்துக்குளத்தில் எதிர்ப்பு குரல் எழுப்பிய போதும், திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்மிகம், சுற்றுலாத்தலம் நிறைந்த பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

ஆனால், உறவு முறை, விவசாயம், தொழில் முறை என பொள்ளாச்சியுடன் தொடர்பாக இருக்கும் சூழலில், மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பழநியை தலைமையிடமாக கொண்டு, உடுமலை, மடத்துக்குளம் பகுதி இணைக்கப்படுவதாக தகவல் பரவியது.

மக்கள் அதிர்ச்சி


உடுமலை, மடத்துக்குளம் பகுதி மக்கள், அதிர்ச்சியடைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.பழநி மாவட்டம் உருவானால், இனி பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் என்பது கனவாக மாறிவிடும் என்கின்றனர் பொள்ளாச்சி பகுதி மக்கள்.

மேலும், பொள்ளாச்சி மாவட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுக்க துவங்கியுள்ளனர். கையெழுத்து இயக்கம், அமைச்சர் சந்திப்பு, சமூக வலைதளங்கள் வாயிலாக மாவட்டம் உருவாக்குவதற்கான அவசியம் குறித்து விளக்கி வருகின்றனர். ஆனால், அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் இல்லாததால், மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஏனிந்த தயக்கம்


கடந்த, ஆறு ஆண்டுகளில் தமிழகத்தில், ஆறு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த, 13 ஆண்டுகளாக கொங்கு மண்டலத்தில் ஒரு மாவட்டம் கூட உருவாகவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில், பொள்ளாச்சியை மாவட்டமாக்க கருத்துரு பெறப்பட்டது. அதன்பின், மாவட்ட அறிவிப்பு வரும் என அனைத்து தரப்பினரும் காத்திருந்தனர்.

ஆனால், மாவட்டம் பிரிக்கப்பட்டால், கட்சியில் மாவட்ட பொறுப்பில் உள்ளவர்களின் அதிகாரம் பகிரப்படும்.பொள்ளாச்சியில் அதிகாரம் முக்கியத்துவம் குறைந்து விடும் என நினைத்து, மாவட்ட அறிவிப்புக்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்தது.

அதன்பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கோவை மாவட்டத்தில் தி.மு.க., வெற்றி பெறவில்லை. இதனால், இப்பகுதிக்கான திட்டங்கள் பெருமளவில் செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தால், பொள்ளாச்சி மாவட்ட அறிவிப்பு வெளி வரும், என, துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் பிரசாரத்தின் போது பகிரங்கமாக தெரிவித்தனர். தேர்தல்களில் தி.மு.க., வெற்றி பெற்ற பின், அதற்கான அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை.

தி.மு.க.,வினர் இந்த வாக்குறுதியை வைத்தே வெற்றி பெறலாம் என திட்டமிட்டு அதற்கான வாய்ப்புகளை உருவாக்காமல் இருக்கிறதோ என சந்தேகம் எழுந்துள்ளது.இதனால், ஏமாற்றமடைவது என்னவோ, ஓட்டுப்போடும் பொதுமக்கள் தான். பட்ஜெட் கூட்டத்தில், என்ன அறிவிப்பு வரப்போகிறதென, பொறுத்திருந்து பார்ப்போம்!

மாறிமாறி குற்றச்சாட்டு!


தி.மு.க.,வினர் கூறுகையில், 'அ.தி.மு.க.,வினர் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது, பொள்ளாச்சி மாவட்டத்தை உருவாக்கியிருக்கலாம்,' என்கின்றனர்.அ.தி.மு.க.,வினர், 'நாங்கள் செய்வதற்கு முயற்சிகள் எடுத்தோம்; அதற்குள் கொரோனா பாதிப்பு வந்தது. அதன்பின், ஆட்சி முடிந்தது.
மாவட்டம் அறிவிப்புக்கு, ஆவணங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தது. தி.மு.க.,வினர் இந்த நான்கு ஆண்டில் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டியது தானே,' என கேள்வி எழுப்புகின்றனர்.இரு கட்சிகளும் மாறி, மாறி குறை சொல்லிக்கொண்டே இருக்கிறதே தவிர, மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுத்தது போன்று தெரியவில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us