ADDED : ஜூன் 10, 2025 09:36 PM
கடன் அதிகரிப்பால் விவசாயி தற்கொலை
பொள்ளாச்சி அருகே அங்கலகுறிச்சியை சேர்ந்தவர் செந்தில்பிரசாத்,27. இவர், 15 மாடுகள் வைத்து விவசாயம் செய்து வந்தார். மாடுகள் வாங்குவதற்காக தனியார் வங்கிகள், தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கி வட்டி செலுத்தி வந்தார்.
இதனால், மனம் உடைந்து இருந்த செந்தில்பிரசாத், நேற்றுமுன்தினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை மீட்ட உறவினர்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆழியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாட்டர்மேனை தாக்கிய தொழிலாளி கைது
பொள்ளாச்சி அருகே, வக்கம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி,39.இவர், ஊராட்சி வாட்டர்மேனாக பணியாற்றி வருகிறார்.நேற்றுமுன்தினம் பணி நிமித்தமாக வக்கம்பாளையம் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள ஆழ்குழாய் கிணற்றை பார்வையிட சென்றார்.
அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த நபரை கண்டித்து வெளியே அனுப்பினார். இதை மனதில் வைத்து கொண்டு அந்த நபர், தகாத வார்த்தையால் பேசியும், கருப்புசாமியை கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் விசாரித்ததில், அவர், பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த கார்த்திக்கேயன், 23, என்பதும், வக்கம்பாளையத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர்கள் மூவர் கைது
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்பிரபு. இவர், நேற்று முன்தினம் இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதிக்கு பஸ்சை இயக்கினார். இரவு, 9:00 மணிக்கு வால்பாறை நகரில் உள்ள டிப்போவுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் வந்த மூன்று பேர், சைடு கொடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, டிரைவரை தகாத வார்த்தையால் திட்டியும், கல்லால் தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, அரசு பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில், பைக்கில் வந்த முடீஸ் பகுதியை சேர்ந்த சஞ்சய்,21, சிவசக்தி,23, கண்ணன்,40, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.