/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளஸ் 1 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது; மாணவ, மாணவியர் உற்சாகம் பிளஸ் 1 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது; மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 1 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது; மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 1 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது; மாணவ, மாணவியர் உற்சாகம்
பிளஸ் 1 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது; மாணவ, மாணவியர் உற்சாகம்
ADDED : மார் 24, 2025 11:06 PM

பிளஸ் 1, கணிதம் தேர்வு எளிமையாக இருந்ததாக, தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 38 மையங்களில் நடக்கிறது. நேற்று, கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டனர்.
தேர்வு குறித்து, லதாங்கி வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்துவருமாறு:
ஆதித்யவர்ணா: கணிதம் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள், மிகவும் எளிமையாக இருந்தது. கட்டாய வினாக்களும் எளிமையாக இருந்ததால், விடைகளை விரைந்து எழுத முடிந்தது. முழு மதிப்பெண் கிடைக்கும்.
அபிநந்த்: கணிதம் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு வினாக்கள், பயன்பாடு சார்ந்த வினாக்களாக இருந்தன. இரு மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினா எடுத்துக்காட்டு கணக்கில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. அனைத்து மாணவர்களும் எளிதாக, 80 மதிப்பெண்கள் வரை பெற முடியும்.
ஹரிஹரசுதன்: கணிதம் தேர்வு கடினமாக இருக்குமென நினைத்தேன். ஆனால், தேர்வு எளிதாக இருந்தது. மூன்று மதிப்பெண் வினாக்களில் கட்டாய வினா சிறிது யோசித்து பதில் எழுதும் வகையில் இருந்தது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எதிர்பார்த்தது போலவே அமைந்திருந்தது. நுாறு மதிப்பெண் கிடைக்கும் என, நம்புகிறேன்.
* ஹரிபிரகாஷ், செங்குட்டைபாளையம் சுவாமி சித்பவானந்தா பள்ளி: வணிகவியல் தேர்வு எளிமையாக இருந்தது. மூன்று மதிப்பெண் வினா ஒன்று மட்டும் கடினமாக இருந்தது. மற்ற அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. அரை மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு எழுத முடிந்தது. நன்றாக தேர்வு எழுதி இருக்கிறேன். நிச்சயம் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
அஜய், அரசு மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு: கணிதம் தேர்வில் இரண்டு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தது. மற்ற மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருப்பினும், படித்திருந்ததால் நன்றாக தேர்வு எழுதி இருக்கிறேன். 15 நிமிடத்திற்கு முன்பே தேர்வு எழுதி முடித்துவிட்டேன். நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
* வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கருத்து:
காயத்திரி: வணிகவியல் பாடத்தை பொறுத்த வரை, படித்த பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன். ஒன்று, ஐந்து மதிப்பெண்களுக்கான வினாக்கள் எளிமையாக இருந்தன. மூன்று மதிப்பெண்களுக்கான வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தன. எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும்.
காளீஸ்வரி: கணிதப்பாடத்தை பொறுத்த வரை ரொம்ப ஈசியின்னும் சொல்ல முடியாது, கஷ்டம்னு சொல்ல முடியாது. ஐந்து மதிப்பெண்களுக்கான வினாக்கள் மட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தன. இருப்பினும் பிற வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டதால், தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளேன்.
* தேர்வு குறித்து குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:
விஜி: கணித பாடத்தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில், நான்கு வினாக்கள் பாடப்பகுதிகளின் உள்ளிருந்து சிறிது குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. ஐந்து மதிப்பெண் பகுதி வினாக்கள் எளிமையாக விடை எழுதும் வகையில் இருந்தது. இரண்டு மதிப்பெண் பகுதியிலும் கட்டாய வினாக்கள் குழப்பமாக கேட்கப்பட்டிருந்தது.
ரிஷிவேந்தன்: கணிதம் தேர்வு ஓரளவு எளிமையாக வந்திருந்தது. ஐந்து மதிப்பெண் பகுதியில் எதிர்பார்த்த வினாக்கள் கேட்கப்பட்டதால், விடைகளை எளிதில் பதிலளிக்க முடிந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் ஐந்து வினாக்கள் கடினமாக இருந்தது. இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் பகுதியில் கட்டாய வினாக்கள் பாடப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்பட்டன.
சஞ்சய்: வணிகவியல் தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்டவையாக இருந்ததால் சுலபமாக பதில் எழுதிவிட்டேன். நெடுவினா பகுதியில் இரண்டு வினாக்கள் மட்டும் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்தது.
- நிருபர் குழு -