/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கள்ளுக்கு அனுமதி; காலச்சூழலுக்கு ஏற்ப முடிவு! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். பேச்சு கள்ளுக்கு அனுமதி; காலச்சூழலுக்கு ஏற்ப முடிவு! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். பேச்சு
கள்ளுக்கு அனுமதி; காலச்சூழலுக்கு ஏற்ப முடிவு! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். பேச்சு
கள்ளுக்கு அனுமதி; காலச்சூழலுக்கு ஏற்ப முடிவு! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். பேச்சு
கள்ளுக்கு அனுமதி; காலச்சூழலுக்கு ஏற்ப முடிவு! அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். பேச்சு
ADDED : செப் 11, 2025 09:41 AM

பொள்ளாச்சி; ''கால சூழலுக்கு ஏற்ப 'கள்' பிரச்னையில் முடிவு எடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணமாக பொள்ளாச்சி வந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி, விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் நேற்று பங்கேற்றார்.
விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் பேசியதாவது:
கைத்தறி நெசவு தொழில் நலிவடைந்ததால், நெசவாளர்கள் மாற்றுத்தொழிலுக்கு செல்கின்றனர். நுால் விலை, பட்டு விலை உயர்ந்துள்ளது. நெசவாளர்களுக்கு ஒரு வீடு கூட அமைத்து தரவில்லை. பொள்ளாச்சியை மாநகராட்சி, மாவட்டமாக மாற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஏ.பி., திட்டத்தில் நிலுவையில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். போயர் சமூகத்துக்கு நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். நலிவடைந்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், 19 நீரா உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உயர் தொழில்நுட்பம் கொண்டு பதப்படுத்தும் முறையை கொண்டு வர வேண்டும்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பாலுக்கு குறைந்தபட்சம் லிட்டருக்கு, 50 ரூபாய் வழங்க வேண்டும். கலப்பு தீவன விலை உயர்வு கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேசுகையில், ''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், கள்ளுக்கு தடை நீக்கம் செய்வதாக அறிவித்தனர். இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை,'' என்றார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள்கட்டித்தருதல் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். தி.மு.க. ஆட்சியில் கடந்த, நான்கு ஆண்டுகளில், 4.38 லட்சம் கோடி கடன் உள்ளது. ஐந்தாண்டுகளில், 5.38 லட்சமாக கடன் உயரும். அளவுக்கு மீறி கடன் வாங்கியதால் தான், அதிக வரி சுமையை மக்கள் மீது சுமத்துகின்றனர். நிதியை உருவாக்க எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை.
பி.ஏ.பி., கால்வாய்கள் பராமரிப்பு பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவர். ஆயக்கட்டு பகுதிகளில் மனைகளான நிலங்களை கணக்கெடுத்து, அதற்கு மாற்றாக விளைநிலங்கள் சேர்க்க ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் செயல்படுத்த கேரளா மாநில முதல்வர், நீர்ப்பாசன துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அது எல்லாமே நின்றுவிட்டது.
கள்ளுக்கான தடை நீக்கம் குறித்து கள் ஒருங்கிணைப்பாளர் பல முறை பேசியுள்ளார். ஒரு பிரச்னை எழும் போது, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பும். கால சூழலுக்கு ஏற்ப 'கள்' பிரச்னையில் முடிவு எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் நலன் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.