Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடுதோறும் குப்பை தரம் பிரித்து வழங்க மக்கள் ஒத்துழைக்கணும்! ஒன்றிய அதிகாரிகள் வேண்டுகோள்

வீடுதோறும் குப்பை தரம் பிரித்து வழங்க மக்கள் ஒத்துழைக்கணும்! ஒன்றிய அதிகாரிகள் வேண்டுகோள்

வீடுதோறும் குப்பை தரம் பிரித்து வழங்க மக்கள் ஒத்துழைக்கணும்! ஒன்றிய அதிகாரிகள் வேண்டுகோள்

வீடுதோறும் குப்பை தரம் பிரித்து வழங்க மக்கள் ஒத்துழைக்கணும்! ஒன்றிய அதிகாரிகள் வேண்டுகோள்

ADDED : செப் 11, 2025 09:33 PM


Google News
பொள்ளாச்சி; பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், வீடுகள்தோறும் குப்பையை வகைப் பிரித்து அளிக்கும் வகையில் தனியார் பங்களிப்புடன், இரு வேறு வண்ணங்களில் குப்பைத் தொட்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு, சுவாசக் ​கோளாறு, நிலத்தடி நீர் மாசடைதலை தடுக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் உள்ளாட்சி அமைப்புகள்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வீடுகளில் சேகரமாகும் குப்பைகள், மக்கும் மற்றும் மக்காத குப்பை என வகை பிரித்து, துாய்மைக் காவலர் வசம் ஒப்படைக்க வேண்டும். இதன் வாயிலாக, மக்கும் குப்பைகளைக் கொண்டு எளிதாக உரம் தயாரிக்க முடியும். மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கு அனுப்ப முடியும்.

இதன் வாயிலாக, குப்பை கிடங்குகளுக்கு செல்வதும் குறையும். அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில், துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், 'துாய்மை தெரு வீரர்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக வாரந்தோறும், ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, வீடுகள்தோறும் குப்பையை வகைப் பிரித்து அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கும் குப்பை, முழு வீச்சில் அகற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தனியார் பங்களிப்புடன் வீடுகள்தோறும், பச்சை, நீலம் என இரு வேறு வண்ணங்களில், குப்பைத் தொட்டி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி வடக்கு ஒன்யறித்தில், 39 ஊராட்சிகளில், 196 துாய்மைக் காவலர்கள் பணியில் உள்ளனர். இவர்கள், வீடுகள்தோறும், நேரடியாகச் சென்று குப்பையை சேகரம் செய்து வருகின்றனர். ஆனால், மக்கள் வீடுகளிலேயே குப்பையை வகை பிரிக்காமல், ஒன்றுசேர அளிப்பதால் துாய்மைக் காவலர்கள் பாதிக்கின்றனர்.

பல நேரங்களில், பிளேடு, சிரிஞ்ச் உள்ளிட்டவை வகை பிரிக்காமல் குப்பைகளோடு சேர்த்து கொட்டப்படுவதால், கையுறை அணிந்திருந்தாலும் காயம் ஏற்படுத்துகிறது. இதனை மக்கள் உணர்ந்து கொள்வது கிடையாது.

தற்போது, 'துாய்மை தெரு வீரர்கள்' என்ற தலைப்பில், வாரந்தோறும் ஒரு ஊராட்சியில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதுவரை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட கிராமங்களில், திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, குப்பையை வகை பிரித்து அளித்து வருகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் வீடுகள்தோறும் குப்பை சேகரிக்க, சொத்து வரிக்கு ஏற்றாற்போல சேவை வரியும் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும், தனியார் பங்களிப்புடன் மக்கும் மற்றும் மக்காத குப்பையை வகை பிரித்து அளிக்க, பச்சை, நீலம் என, வீடுகள்தோறும் தொட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பச்சை நிற தொட்டியில் மக்கும் குப்பையான உணவு, பழம், காய்கறி, மலர் உள்ளிட்ட கழிவுகள், இறைச்சி வகைகள், முட்டை ஓடு, தோட்ட கழிவுகள் வழங்க வேண்டும். நீல நிற தொட்டியில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், கண்ணாடி பொருட்கள் தெர்மாகோல், பேப்பர் அட்டை, பழைய இரும்பு, பழைய துணி, மர பொருட்கள், ரப்பர், தோல் பொருட்கள் மற்றும் மின்சாதன கழிவுகள் அளிக்க அறிவுறுத்தப்படும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us