/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி
கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி
கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி
கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதி
ADDED : ஜூன் 25, 2025 10:14 PM

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே சேரன் நகர் பகுதியில், கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு சேரன் நகர் 2-வது பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில், சில மாதங்களுக்கு முன் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால் கட்டப்பட்டது.
இந்த வடிகாலில் வாட்டம் சரியாக இல்லாததால், கழிவுநீர் வடிந்து செல்லாமல், ஒரே இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் மழை காலங்களில் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது. கொசுக்கள் உற்பத்தி அதிகம் ஆகி, கொசு தொல்லை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து காரமடை நகராட்சி பா.ஜ.,கவுன்சிலர் விக்னேஷ் கூறுகையில், வடிகால் அமைக்கும் போதே வாட்டம் சரி பார்க்காமல், ஏனோ தானோ என அமைத்துள்ளனர். நகராட்சி பிரிவு பொறியாளர்கள் மிகவும் அலட்சியமாக செயல்பட்டதன் விளைவு இது.
வீட்டை விட்டு வெளியே வந்தால் சாக்கடை வடிகாலுக்குள் விழும் நிலை உள்ளது. மேலும், சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருகிறது.ஏற்கனவே காரமடை நகராட்சியில் மங்களக்கரை புதூர் பகுதியில் தவறாக கட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் இடித்து அகற்றப்பட்டது. நகராட்சியில் மீண்டும் அதே மாதிரியான தவறு நடைபெற்றுள்ளது, என்றார்.
இதுகுறித்து காரமடை நகராட்சி நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வடிகால் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழிவு நீர் முறையாக வெளியேற மீண்டும் கழிவு நீர் வடிகால் இடித்து கட்டப்படும், என்றார்.---