/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் 'பீக் ஹவர்ஸ்' விபத்து அதிகரிப்பு; ஐந்து மாதங்களில் 118 பேர் உயிரிழப்பு கோவையில் 'பீக் ஹவர்ஸ்' விபத்து அதிகரிப்பு; ஐந்து மாதங்களில் 118 பேர் உயிரிழப்பு
கோவையில் 'பீக் ஹவர்ஸ்' விபத்து அதிகரிப்பு; ஐந்து மாதங்களில் 118 பேர் உயிரிழப்பு
கோவையில் 'பீக் ஹவர்ஸ்' விபத்து அதிகரிப்பு; ஐந்து மாதங்களில் 118 பேர் உயிரிழப்பு
கோவையில் 'பீக் ஹவர்ஸ்' விபத்து அதிகரிப்பு; ஐந்து மாதங்களில் 118 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 06, 2025 06:06 AM

கோவை; கோவை மாநகர பகுதிகளில், கடந்த ஐந்து மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில், 118 பேர் பலியாகியுள்ளனர்.
கோவை மாநகர பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. வாகனங்களின் அபரிமித எண்ணிக்கை, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் - பணிக்கு செல்வோரின் அவசரம் என பல்வேறு காரணங்களால், தினசரி சாலை விபத்துகள் நடக்கின்றன.
கடந்தாண்டு, 1,170 சாலை விபத்துகளில், 286 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அடிக்கடி விபத்து நடக்கும் இடத்தை கண்டறிந்து, அங்கு வேகத்தடைகள், தடுப்புகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, விபத்து நடந்த இடங்களில் அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, இந்தாண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.
எனினும், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், 118 பேர் சாலை விபத்துகளில் தங்களின் உயிரை பறிகொடுத்துள்ளனர். அதில் 50 சதவீதம் பேர் இளைஞர்கள்.
* கடந்த ஜன., 1 முதல் மே 31 வரை, கோவை கிழக்கு பகுதியில், 221 விபத்துகள், மேற்கு பகுதியில் 254 விபத்துகள் என மொத்தம் 357 விபத்துகள் நடந்துள்ளன. அதில் கிழக்குப் பகுதியில் 54 பேர், மேற்கு பகுதியில் 64 பேர் என, 118 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், குறிப்பாக 18 வயது முதல் 30 வயது வரையிலான, 51 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 34 பேர் ஓட்டிய வாகனங்கள் புது வாகனங்கள். பெரும்பாலான விபத்துக்கள் வேகத்தினால் ஏற்படுகின்றன.
'பீக் ஹவர்ஸ்' எனப்படும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
போக்குவரத்து போலீஸ் அதிகாரி கூறுகையில், 'மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறித்து 'யூ டர்ன்', சிக்னல்களுக்கு பதிலான 'ரவுண்டானா' அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படுகிறது. விபத்து நடக்கும் இடங்களை கண்டறித்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வது விபத்துகள் நடக்க முக்கிய காரணமாக உள்ளது' என்றார்.