/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ராம் நகர் முழுவதும் 'பார்க்கிங்' ஆக்கிரமிப்பு... பொதுமக்கள் தவிப்பு; போலீசாருக்கு 'கவனிப்பு!'ராம் நகர் முழுவதும் 'பார்க்கிங்' ஆக்கிரமிப்பு... பொதுமக்கள் தவிப்பு; போலீசாருக்கு 'கவனிப்பு!'
ராம் நகர் முழுவதும் 'பார்க்கிங்' ஆக்கிரமிப்பு... பொதுமக்கள் தவிப்பு; போலீசாருக்கு 'கவனிப்பு!'
ராம் நகர் முழுவதும் 'பார்க்கிங்' ஆக்கிரமிப்பு... பொதுமக்கள் தவிப்பு; போலீசாருக்கு 'கவனிப்பு!'
ராம் நகர் முழுவதும் 'பார்க்கிங்' ஆக்கிரமிப்பு... பொதுமக்கள் தவிப்பு; போலீசாருக்கு 'கவனிப்பு!'
ADDED : ஜூன் 20, 2024 05:42 AM

கோவை ராம்நகரில், வீதிகளில் உள்ள ரோட்டோரங்களில் ஆண்டுக்கணக்கில் கார்களை நிறுத்தி ஆக்கிரமித்திருப்பதால், பொது மக்கள் வண்டிகளை நிறுத்த முடியாமல் தவிக்க வேண்டியுள்ளது.
கோவையின் மிகப்பழமையான குடியிருப்புப் பகுதியாக இருந்த ராம்நகர், சமீபத்திய ஆண்டுகளில் முற்றிலும் வணிகப்பகுதியாக மாறியுள்ளது. ஆங்காங்கே இருக்கும் தனி பங்களாக்கள் மற்றும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைத் தவிர்த்து, மற்ற கட்டடங்கள் அனைத்தும் வணிகப் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.
எவ்விதமான அனுமதியும் பெறாமல் கட்டடங்களில் மாற்றங்கள் செய்வது, வணிகக் கட்டடங்களுக்கான சொத்து வரி செலுத்தாமல் இருப்பது, குடியிருப்புக்கான மின் இணைப்பை வணிகப் பயன்பாட்டுக்கு உபயோகிப்பது என பலவிதமான விதிமீறல்கள் நடந்து வருகின்றன.
இதைக் கண்டறிந்து, கட்டடத்துக்கேற்ற வரி, மின் கட்டணம் வசூலிக்க வேண்டியது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் பொறுப்பாகும்.
பார்க்கிங் வசதி இல்லை
காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோடு அவற்றை ஒட்டியுள்ள வீதிகளிலும் இதே விதிமீறல் தாராளமயமாக நடந்து வருகிறது. இந்த வணிகக் கட்டடங்கள் பெரும்பாலானவற்றில், 'பார்க்கிங்' இடங்களே இல்லாமல் ரோட்டோரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமே கிடைப்பதில்லை.
ராம்நகரில், பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. அந்த நிறுவனங்கள், பெயரளவுக்கு ஒரு சில கட்டடங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, சில கார்களை மட்டும் அங்கு நிறுத்தி விட்டு, மற்ற கார்களை ரோட்டோரங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளன. மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் இந்த கார்கள், ரோட்டோரங்களை நிரந்தரமாக ஆக்கிரமித்துள்ளன.
மறு விற்பனைக்கு வரும் கார்கள், பெரும்பாலும் துாசி படிந்து, குப்பை குவிந்து நிற்பதைப் பார்த்தாலே, அவை எவ்வளவு மாதங்களாக நிற்கும் என்பதை எல்லோராலும் தெரிந்து கொள்ள முடியும். ராமர் கோவில் வீதி, சென்குப்தா ரோடு, அன்சாரி வீதி, படேல் ரோடு, சாஸ்திரி வீதி, காளிங்கராயன் வீதி என ராம்நகரிலுள்ள பல்வேறு வீதிகளிலும், இந்த நிரந்தர ஆக்கிரமிப்பு, அதிகரித்துள்ளது.
இதனால், இந்தப் பகுதிகளில் உள்ள எந்தக் குடியிருப்புக்கும், அலுவலகங்களுக்கும், கடைகளுக்கும் மக்கள் வந்தாலும், அவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ரோட்டோரத்தில் இடம் கிடைப்பதில்லை. பத்து நிமிடங்களுக்குக் கூட கார் அல்லது டூ வீலரை நிறுத்த முடியாமல், எங்கெங்கோ நிறுத்தி விட்டு, நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
மர்ம வாகனங்களுக்கு புகலிடம்
அதேபோன்று, பல்வேறு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் கார்களையும் இங்கு ரோட்டோரங்களில் நிறுத்தி விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஏனெனில், டூரிஸ்ட் பர்மிட் பெற்ற கார்களை, வாரம் முழுவதும் இங்கே ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் எங்கோ எடுத்துச் செல்வது, பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.
கார் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மட்டுமின்றி, சில தனி நபர்களும் தங்கள் கார்களை இங்கு ரோட்டோரங்களில் நிறுத்தி விட்டு, மாதக்கணக்கில் எடுக்காமல் உள்ளனர். இந்த கார்களை ரோட்டோரங்களில் நிறுத்துவதற்கு, காந்திபுரம் போலீசாருக்கும், போக்குவரத்துப் போலீசாருக்கும் மாதாந்திர மாமூல் தரப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பதற்கு, போலீசார்தான் தங்கள் நடவடிக்கைகளால் பதில் சொல்ல வேண்டும்!
-நமது நிருபர்-