Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேனீ வளர்க்க துணை ராணுவத்துக்கு பயிற்சி! வேளாண் பல்கலையில் 'இனிப்பு' புரட்சி

தேனீ வளர்க்க துணை ராணுவத்துக்கு பயிற்சி! வேளாண் பல்கலையில் 'இனிப்பு' புரட்சி

தேனீ வளர்க்க துணை ராணுவத்துக்கு பயிற்சி! வேளாண் பல்கலையில் 'இனிப்பு' புரட்சி

தேனீ வளர்க்க துணை ராணுவத்துக்கு பயிற்சி! வேளாண் பல்கலையில் 'இனிப்பு' புரட்சி

ADDED : ஜூன் 15, 2025 10:30 PM


Google News
Latest Tamil News
கோவை; பிரதமர் மோடியின் 'மிதி கிராந்தி' எனப்படும் இனிப்பு புரட்சியை, சாத்தியமாக்குவதன் ஒரு பகுதியாக, துணை ராணுவத்தினருக்கு வேளாண் பல்கலையின் பூச்சியியல் துறை சார்பில், தேனீ வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டும், அதுசார்ந்து தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பிரதமர் மோடி, மிதி கிராந்தி எனப்படும் இனிப்பு புரட்சியை அறிவித்தார். தேனீக்கள் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து, அதன் வாயிலாக மகசூல் அதிகரிக்கும் என்பது, இதன் முக்கிய நோக்கம்.

படை வீரர்களுக்கு பயிற்சி


கோவை வேளாண் பல்கலையின், பூச்சியியல் துறை சார்பில், தேனீ வளர்ப்பு பயிற்சி நீண்ட காலமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, துணை ராணுவப்படைக்கும் தேனீ வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக, பூச்சியியல் துறை பேராசிரியர் சாமிநாதன் கூறியதாவது:

விவசாயிகள், பொதுமக்கள், தேனீ வளர்ப்போருக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். தற்போது, துணை ராணுவத்தினருக்கும் அளிக்கிறோம்.

வெள்ளலூரில் உள்ள அதிவிரைவுப் படை, பாலமலை அருகே உள்ள சி.ஆர்.பி.எப்., கோவை விமான நிலையத்தில் உள்ள, சி.ஐ.எஸ்.எப்., படையினருக்கு கடை நிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை, தேனீ வளர்க்க பயிற்சி அளிக்கிறோம். இந்தோ-- திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், பயிற்சி அளித்துள்ளோம். அரக்கோணம், சிவகங்கை, சென்னை என பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி அளித்துள்ளோம்.

தேனீக்களை அடையாளம் காணுதல், பெட்டிகளைக் கையாளுதல், தேன் எடுத்தல், தேனீ குடும்பங்களை உருவாக்குதல் என அனைத்து பயிற்சிகளையும் அளித்து, உபகரணங்களை வழங்குகிறோம்.

மன அழுத்தம் போக்கும்


இதன் மற்றொரு சிறந்த பயன், வீரர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க தேனீ வளர்ப்பு உதவும். தேனீக்களை வளர்ப்பது, ஒரு செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல. அவற்றின் செயல்பாடுகளை, 10 நிமிடம் தொடர்ந்து கவனித்து வந்தால், மன அழுத்தம் நிச்சயம் குறையும்.

தாங்கள் உற்பத்தி செய்த, சுத்தமான தேனைப் பயன்படுத்தும்போது, அவர்கள் இன்னும் மகிழ்ச்சி அடைகின்றனர். தற்போது எல்லையில் ஊடுருவலைக் கண்காணிக்கவும், ராணுவத்தினர் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனீக்களின் மீதான பயம் போனால், அவற்றை வளர்ப்பது எளிது. முதியவர்களும் எளிதில் வளர்க்கலாம். வீடுதோறும் பெட்டி வைக்கலாம். சுற்றுப்புறத்தில் தேனீக்களுக்கான உணவு இருந்தால் போதும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'வருவாய் ஈட்ட முடியும்'

''மலைத்தேனீ, கொம்புத் தேனீ, இந்தியத் தேனீ, இத்தாலி தேனீ ஆகிய நான்கு வகைகளில், இந்திய, இத்தாலிய தேனீ வகைகள்தான், வளர்க்க ஏதுவானவை. தேனீ வளர்ப்பில் தேன், தேன் மெழுகு, பிசின், ராயல் ஜெல்லி என பல்வேறு வகைகளில் வருவாய் ஈட்ட முடியும். ஆர்வமுள்ள அனைவருக்கும் பயிற்சி அளிக்கிறோம்,'' என்றார் பேராசிரியர் சாமிநாதன்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us