/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மழைநீர் சேகரிக்காத கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் எடுக்குது 'சுளுக்கு'மழைநீர் சேகரிக்காத கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் எடுக்குது 'சுளுக்கு'
மழைநீர் சேகரிக்காத கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் எடுக்குது 'சுளுக்கு'
மழைநீர் சேகரிக்காத கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் எடுக்குது 'சுளுக்கு'
மழைநீர் சேகரிக்காத கட்டடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி நிர்வாகம் எடுக்குது 'சுளுக்கு'
ADDED : மே 22, 2025 03:27 AM

கோவை : மாநகராட்சி பகுதிகளில், கடந்த ஒரு வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 10 சதவீத குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீரை செறிவூட்டும் விதமாக, மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இப்பகுதியில், போதிய மழை பெய்தாலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு போதியளவில் இல்லாததால், கழிவுநீராக வீணாகிறது.மாநகராட்சி பகுதிகளில், திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துகொண்டே செல்கிறது. எனவே, நிலத்தடி நீர் சேமிப்பை அதிகரிக்கும் வகையில், துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி குழு
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாதிரி கட்டமைப்பு ஏற்படுத்தி, அனைவரும் மழை நீர் சேகரிக்க வேண்டுமென, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என அனைத்து கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய, மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மண்டலத்துக்கு நால்வர் வீதம் ஐந்து மண்டலங்களிலும் சேர்த்து களப்பணியாளர்கள், 20 பேர், மேற்பார்வையாளர்கள் ஐந்து மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் ஒருவர் என்கிற அடிப்படையில், 26 பேர் அடங்கிய குழு, கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
இக்குழு, அனைத்து கட்டடங்களிலும் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளது. தென் மேற்கு பருவமழை துவங்கும் முன், இக்குழு ஆய்வு மேற்கொண்டு, மாநகராட்சிக்கு அறிக்கை அளிப்பதுடன், கட்டட உரிமையாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும், விழிப்புணர்வையும் வழங்கவுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில், 2000க்கும் மேற்பட்ட கட்டடங்களில் இக்குழு மேற்கொண்ட ஆய்வில், 300க்கும் மேற்பட்ட வீடுகளில்(10 சதவீதம்), மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாதது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் வாயிலாக நோட்டீஸ் வழங்கி, நிர்வாக நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது மாநகராட்சி.