ADDED : மே 11, 2025 12:16 AM
கோவை: வி.ஜி.எம்., மருத்துவமனை மற்றும் கோவை தடகள சங்கம் சார்பில், ஜூலை 27 ம் தேதி 'ரன் பார் நேஷன்' (run for nation) மராத்தான் போட்டி, வ.உ.சி., மைதானத்தில் நடைபெறவுள்ளது. அறிமுகவிழா நேற்று மருத்துவமனை அரங்கில் நடந்தது. மாநகராட்சி மேயர் ரங்கநாயகி நிகழ்வில்தலைமை வகித்தார்.
இதில், 7,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தனியார் அமைப்புகள், விளையாட்டு கிளப் மாணவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். மேலும், 150 மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் மராத்தான் நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
மராத்தான் போட்டியின் வாயிலாக பெறப்படும் நிதி, 25க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த ஏழை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது.
அறிமுகவிழா நிகழ்வில், வி.ஜி.எம்., மருத்துவமனை தலைவர் மோகன் பிரசாத், எலும்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் சுமன், கோவை தடகள கழக செயலாளர் சீனிவாசன், எண்டோஸ்கோப்பி துறை இயக்குனர்மதுரா, டாக்டர் வம்சி மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.