/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மினிபஸ் வழித்தடம் பெறுவதற்கு எப்படி ஏமாத்தறாங்க பாருங்க! போன் போட்டு கலெக்டர் அம்பலம்மினிபஸ் வழித்தடம் பெறுவதற்கு எப்படி ஏமாத்தறாங்க பாருங்க! போன் போட்டு கலெக்டர் அம்பலம்
மினிபஸ் வழித்தடம் பெறுவதற்கு எப்படி ஏமாத்தறாங்க பாருங்க! போன் போட்டு கலெக்டர் அம்பலம்
மினிபஸ் வழித்தடம் பெறுவதற்கு எப்படி ஏமாத்தறாங்க பாருங்க! போன் போட்டு கலெக்டர் அம்பலம்
மினிபஸ் வழித்தடம் பெறுவதற்கு எப்படி ஏமாத்தறாங்க பாருங்க! போன் போட்டு கலெக்டர் அம்பலம்
ADDED : மார் 25, 2025 06:26 AM

கோவை; புதிய வழித்தடங்களில் மினிபஸ்களை இயக்க, அனுமதி பெறுவதில் முறைகேடுகள் நடந்திருப்பதை, அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தி கண்டறிந்தார், கோவை கலெக்டர். உடனடியாக அந்த விண்ணப்பங்களை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கோவை மாவட்டத்தில், அரசு மற்றும் டவுன்பஸ்கள் செல்லாத, போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களையும், நகரங்களையும் இணைக்கும் வகையிலான வழித்தடங்களில், மினிபஸ்களை இயக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாயிலாக ஏற்பாடுகள் நடந்தன.
67 வழித்தடங்கள்
கோவை வடக்கு, தெற்கு, மேற்கு, மத்தியம் ஆகிய நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், 67 வழித்தடங்களுக்கு 323 விண்ணப்பங்கள் வந்தன.
இந்த விண்ணப்பங்கள் மீது, ஆய்வு மேற்கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தேர்வு செய்வதற்காக கலெக்டர் வசம், அனைத்து விண்ணப்பங்களையும் ஒப்படைத்தனர்.
ஒவ்வொரு விண்ணப்பங்களாக ஆய்வு செய்த கலெக்டர், ஒரு சில விண்ணப்பங்களை கையில் எடுத்து, அதிலுள்ள மொபைல் போன் எண்ணுக்கு சக அதிகாரிகளிடம் போன் செய்யுமாறு, மைக்கில் பேச அறிவுறுத்தினார்.
பஸ்சா... நானா!
அப்போது விண்ணப்பதாரர் பெயரும், விண்ணப்பத்தில் உள்ள தகவல்களும் வெவ்வேறாக இருந்தன. வழித்தடம் குறித்து கேட்டதற்கு, முன்னுக்குப் பின் முரணான தகவலை போனில் பேசிய நபர் தெரிவித்தார். இதன் வாயிலாக, மினி பஸ்சுக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது.
இது குறித்து, விண்ணப்பத்துடன் நேரடி உத்தரவு பெற வந்தவரிடம் விசாரித்த போது, ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தை, எப்படியேனும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக, ஒரே நபர் வெவ்வேறு பெயர்களில் விண்ணப்பித்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டது.
இதே போல், பல்வேறு மினிபஸ் வழித்தடங்களில், குளறுபடி நடந்திருப்பதை அதிகாரிகள் முன்னிலையில், கலெக்டர் போன் செய்து அம்பலப்படுத்தினார். முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து விண்ணப்பங்களையும் ரத்து செய்தார். விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல், கலெக்டருக்கு பரிந்துரை செய்த வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வா ளர்களுக்கு, கடும் எச்சரிக்கை விடுத்தார்.
கலெக்டரின் இந்த எதிர்பாராத அதிரடியால், அதிகாரிகளும், ஊழியர்களும் கதிகலங்கிப்போயுள்ளனர்.