ADDED : ஜூன் 15, 2025 10:17 PM

பெ.நா.பாளையம்; கணுவாய் அருகே திருவள்ளுவர் நகரில் வீட்டு நாயை கொல்ல முயன்ற சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வடக்கு மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கணுவாய், காளையனுர், சோமையனூர், திருவள்ளுவர் நகர் மற்றும் அதையொட்டி உள்ள தோட்டப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு தடாகம் அருகே உள்ள சோமையனூர், திருவள்ளுவர் நகர் பகுதியில் வீட்டின் முன், திறந்திருந்த கேட்டின் வழியாக வீட்டு நாய் வெளியே சென்றது. அப்போது அங்கு வந்த சிறுத்தை, நாயைக் கவ்வி பிடித்து கொல்ல முயன்றது. சில வினாடி போராட்டத்திற்குப் பிறகு, நாய் தப்பி வீட்டுக்குள் வந்துவிட்டது. இச்சம்பவம் அங்குள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. இதே பகுதியில் ஏற்கனவே நாய் மற்றும் ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது. வீட்டுக்குள் மேய்ந்து கொண்டிருந்த கோழி மற்றும் சேவல்களையும் சிறுத்தை கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அச்ச உணர்வுடன் நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.