Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்வியில் சர்வதேச மயமாக்கல் அவசியம்! உயர்கல்வி மாநாட்டில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

கல்வியில் சர்வதேச மயமாக்கல் அவசியம்! உயர்கல்வி மாநாட்டில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

கல்வியில் சர்வதேச மயமாக்கல் அவசியம்! உயர்கல்வி மாநாட்டில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

கல்வியில் சர்வதேச மயமாக்கல் அவசியம்! உயர்கல்வி மாநாட்டில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

ADDED : செப் 11, 2025 09:53 PM


Google News
Latest Tamil News
கோவை; 'கல்வியில் தொழில் மயமாக்கல், சர்வதேச மயமாக்கல் அவசியம்' என, சி.ஐ.ஐ., உயர்கல்வி மாநாட்டில் கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ஒன்பதாவது தேசிய உயர் கல்வி மாநாடு, கோவையில் நேற்று நடந்தது. 'உயர்கல்வியை சர்வதேச மயமாக்குதல் மற்றும் தொழில் மயமாக்குதல்' என்ற தலைப்பில் இம்மாநாடு நடந்தது.

பெங்களூரு தயானந்த சாகர் பல்கலை துணைவேந்தர் சத்யநாராயணா பேசுகையில், ''இந்தியாவின், 100வது சுதந்திர தினத்தில் இந்நாடு முன்னோடி நாடாக இருக்கும். இந்தியா, 60 ஆண்டுகளில், 20 லட்சம் கோடி பொருளாதாரமாக மாறியது. அதன்பின், 11 ஆண்டுகளில் 40 லட்சம் கோடிக்கும் அதிகமாக வளர்ந்தது. அடுத்த ஐந்தாண்டுகளில், 60 லட்சம் கோடி முதல் 80 லட்சம் கோடி பொருளாதாரமாக மாறக்கூடும். இந்தியாவின் அறிவுசார் பொருளாதாரம் காரணமாக இந்த வளர்ச்சி சாத்தியமானது. எதிர்காலத்தில், இந்தியா தனது இலக்குகளை அடைய பலதுறை சார்ந்த, அனுபவபூர்வமான கற்றல் அமைப்பு தேவை,'' என்றார்.

தயாரிப்புக்கு காப்புரிமை சி.ஐ.ஐ., தென்மண்டல முன்னாள் தலைவர் நந்தினி ரங்கசாமி பேசுகையில், ''அடுத்த 10 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், செமி கண்டக்டர் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவை மிக பெரும் முக்கியத்துவம் பெறும். செமி கண்டக்டர் துறைக்கு மட்டும், 2030க்குள், 10 லட்சம் திறமையான பணியாளர்கள் தேவைப்படுவர். அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைகளில் நடக்கும் ஆராய்ச்சிகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமானவை தொழில்துறையால் நிதியளிக்கப்படுகின்றன. தென் கொரியாவின் ஜி.டி.பி.,ல், 5 சதவீதம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவும் இதை பின்பற்ற வேண்டும். நமது ஆய்வுகள் தயாரிப்புகளாகவும், காப்புரிமைகளாகவும் மாற்றப்பட வேண்டும்,'' என்றார்.

அறிவுப் பரிமாற்றம் சி.ஐ.ஐ., - ஐ.டபிள்யூ.என்., பிரிவு தமிழ்நாடு முன்னாள் தலைரும், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி பேசுகையில், ''சர்வதேச பல்கலைகள் பல ஏற்கனவே இந்தியாவுக்கு வந்து விட்டன. மஹாராஷ்டிரா மாநிலம் ஒரு சர்வதேச கல்வி நகரத்தை அறிமுகப்படுத்தி, முன்னணி சர்வதேச பல்கலைகளை ஈர்த்து வருகிறது. அடுத்தாண்டு, ஏழு சர்வதேச பல்கலைகள் இந்தியாவுக்கு வர உள்ளன. சர்வதேச கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வருவதால், போட்டி அதிகம் இருக்கும். இந்திய பல்கலைகளின் தரம் உயரும். இந்திய பல்கலைகள் பாடத்திட்டங்களை சர்வதேச தரத்துக்கு ஏற்ப மேம்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த துறையின் தரமும் உயரும். இதனால், நாட்டில் சிறந்த அறிவுப் பரிமாற்றம் ஏற்படும்,'' என்றார்.

சர்வதேச புகழ் பெறும் சி.ஐ.ஐ., தமிழ்நாடு பிரிவு முன்னாள் தலைவரும், குமரகுரு கல்வி குழும தலைவர் சங்கர் வானவராயர் பேசுகையில், ''இந்தியப் பள்ளிகள் சர்வதேச புகழ் பெற்றவை. உயர்கல்வி நிறுவனங்கள் அதை உதாரணமாக எடுக்க வேண்டும். இந்திய தொழில்துறையை சேர்ந்த பல நிறுவனங்கள் சர்வதேச புகழ் பெற்றுள்ளன.

தொழில் துறை இந்நிலையை அடைய முடியும்போது, இந்திய கல்வித்துறையும் அதை அடைய முடியும். கல்வித்துறையில் இந்தியாவின் ஹார்வர்டு அல்லது பாஸ்டனாக மாறும் ஆற்றல் கோவைக்கு உள்ளது,'' என்றார்.

சி.ஐ.ஐ., கோவை மண்டல தலைவர் ராஜேஷ் துரைசாமி வரவேற்றார். சி.ஐ.ஐ., தமிழ்நாடு கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேஷ் தலைமை வகித்தார். சி.ஐ.ஐ., கோவை கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் சுஜனா அபிராமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us