Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சமையலறையில் இருக்கிறது இதய பாதுகாப்பு; அரசு மருத்துவமனை டாக்டர் சொல்கிறார்

சமையலறையில் இருக்கிறது இதய பாதுகாப்பு; அரசு மருத்துவமனை டாக்டர் சொல்கிறார்

சமையலறையில் இருக்கிறது இதய பாதுகாப்பு; அரசு மருத்துவமனை டாக்டர் சொல்கிறார்

சமையலறையில் இருக்கிறது இதய பாதுகாப்பு; அரசு மருத்துவமனை டாக்டர் சொல்கிறார்

ADDED : செப் 29, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
ஐ ந்து வயது முதலே, உணவு உள்ளிட்ட வாழ்வியல் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தாவிடில், தற்போதைய பள்ளி வயது மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பெரிய அபாயம் காத்திருக்கிறது என எச்சரிக்கின்றார், கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறைத் தலைவர் டாக்டர் நம்பிராஜன்.

அவர் கூறியதாவது:

உலகளவில் அதிக இறப்புகள் ஏற்படுத்துவது, இதய நோய்களாக உள்ளது. முக்கிய காரணம், உணவு, உறக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான பழக்கவழக்கங்கள். ஐந்து வயது முதல் பிள்ளைகளுக்கு ஆரோக்கியம் சார்ந்த கல்வியை பயிற்றுவிக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட உணவு, உடலுக்கு ஆகாது என்று தெரிந்தும் பிள்ளை ஏங்கும்; அழுகிறான் என வாங்கித்தருவது சரியான வளர்ப்பு இல்லை. அழுகிறான் என்றால் விஷம் கொடுத்துவிடுவோமா.

இந்தியாவில் ஆண்டுக்கு, 30 லட்சம் பேர் இருதய நோய் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். தொற்றா நோய்களால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில், 60 சதவீதம் இருதய நோய் பாதிப்பால் மட்டும் ஏற்படுகிறது. வரும் முன் காப்பது ஒன்றே இதற்கு தீர்வு.

என்ன செய்ய வேண்டும் வீடுகளில் உப்பை குறைக்க வேண்டும், எண்ணெய், சர்க்கரையை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டும். எண்ணெய் அதிகமானால், ருசி அதிகமாகும்; பிள்ளை அதிகம் சாப்பிடும் என நினைக்கும் தாய்மார்கள், மாறவேண்டிய நேரம் இது.

சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு பரிசோதனை 20 வயது முதலே ஆண்டுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம்.

தவிர, 'கால்சியம் ஸ்கோரிங்' பரிசோதனை செய்து கொண்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இதய பாதிப்பு வர வாய்ப்பு உள்ளதா என்பதை, முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். போட்டி மனப்பான்மை, பொறாமை, மனஅழுத்தம் தவிர்த்து, உணவு, உறக்கம், உடற்பயிற்சி சரியாக இருக்க வேண்டும். இந்த மாற்றம் பள்ளி, வீடுகளில் இருந்து உடனடியாக துவக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இன்று உலக இதய தினம்!

எச்சரிக்கை செய்யும் மாரடைப்பு அறிகுறிகள்


* மார்பின் மையத்தில் அழுத்தம், இறுக்கம் அல்லது வலி போன்ற உணர்வு சில நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நீடிப்பது, அல்லது வந்து, வந்து போவது.
* உடம்பின் மேல் பகுதியில் வலி அல்லது அசவுகரியம். மார்பைத் தாண்டி கைகள் (குறிப்பாக இடது கை), முதுகு, கழுத்து, தாடை வரை பரவுதல்.
* சாதாரண செயல்பாடுகளின் போதோ, ஓய்வில் இருக்கும்போதோ மூச்சுத் திணறல் ஏற்படுவது. குளிர் வியர்வை, குமட்டல் ஏற்படுவது.
* திடீர் சோர்வு, அதிக வியர்வை, மயக்கம் அல்லது குமட்டல் ஏற்படுவது. இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின், உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us