Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புதிய எம்.பி., யார் என அறிய... இன்று இரவாகி விடும்!உத்தேசமாக 12 மணி நேரம் ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்கள்!

புதிய எம்.பி., யார் என அறிய... இன்று இரவாகி விடும்!உத்தேசமாக 12 மணி நேரம் ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்கள்!

புதிய எம்.பி., யார் என அறிய... இன்று இரவாகி விடும்!உத்தேசமாக 12 மணி நேரம் ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்கள்!

புதிய எம்.பி., யார் என அறிய... இன்று இரவாகி விடும்!உத்தேசமாக 12 மணி நேரம் ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்கள்!

ADDED : ஜூன் 04, 2024 01:32 AM


Google News
Latest Tamil News
கோவை;கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், இன்று காலை, 8:00 மணி முதல் எண்ணப்படுகின்றன. ஒரு சுற்றுக்கு, 25 நிமிடங்களாகும் என்பதால், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பதிவான ஓட்டுகளை எண்ண, உத்தேசமாக, 12 மணி நேரம் தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதனால், முன்னணி நிலவரம் அறிய மதியம், 2:00 மணியாகி விடும்; முழுமையான முடிவு வெளியிடுவதற்கு, இரவு, 8:30 மணியாகலாம்.

கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் இன்று (ஜூன் 4ம் தேதி) எண்ணப்படுகின்றன. மெயின் பில்டிங் தரைத்தளத்தில் கவுண்டம்பாளையம், பல்லடம், சிங்காநல்லுார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள், முதல் தளத்தில் கோவை வடக்கு, தெற்கு, சூலுார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளில், பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.

கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லுார், சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு தலா, 14 டேபிள்கள் போடப்பட்டுள்ளன. பல்லடம் தொகுதிக்கு, 18 டேபிள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு, 20 டேபிள்கள் போடப்பட்டுள்ளன.

தபால் ஓட்டு எண்ணிக்கை


தபால் ஓட்டுகள் எண்ண, கலெக்டர் அறைக்கு அருகில் உள்ள கருத்தரங்கு அறை தயார் செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தொகுதி வாரியாக ஆறு டேபிள்கள், ராணுவ வீரர்கள், விமான படையினர், கப்பல் படையினர் போன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் அளிக்கும் 'சர்வீஸ்' ஓட்டுகளை எண்ணுவதற்கு, பிரத்யேகமாக ஒரு டேபிள் போடப்பட்டு இருக்கிறது.

ஒரு டேபிளுக்கு ஓட்டு எண்ணும் கண்காணிப்பாளர், உதவியாளர், 'மைக்ரோ' அப்சர்வர் என மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கோவை தொகுதிக்கு, 123 ஓட்டு எண்ணும் கண்காணிப்பாளர்கள், 123 ஓட்டு எண்ணும் உதவியாளர்கள், 127 'மைக்ரோ அப்சர்'வர்கள் என, 373 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்ட்ராங் ரூம் அறை திறப்பு


இவர்கள் தவிர, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஒருவர் வீதம் இரண்டு தேர்தல் பொது பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

தபால் ஓட்டுகள் எண்ணும் பணி, இன்று காலை, 8:00 மணிக்கு துவங்கும். இதை துவக்கி வைக்கும் கலெக்டர், அதன்பின், ஸ்ட்ராங் ரூம்களின் சீல்களை, வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்களின் முன்னிலையில் அகற்றுவார். தொகுதி வாரியாக, கன்ட்ரோல் யூனிட்டுகள் ஓட்டு எண்ணும் அறைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, காலை, 8:30 மணிக்கு துவங்கும். அந்தந்த சட்டசபை தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், 'கன்ட்ரோல் யூனிட்'டுகளில் பதிவாகியுள்ள ஓட்டுகள் எண்ணப்படும்.

ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்களாகும்


கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 38வது பட்டனில் 'நோட்டா' சின்னம் பொருத்தப்பட்டது. 'கன்ட்ரோல் யூனிட்' இயந்திரத்தை 'ஆன்' செய்து, மொத்தம் பதிவான ஓட்டு விபரத்தை காண்பித்து, 38 முறை பட்டனை அழுத்தி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான ஓட்டுகளை காட்ட வேண்டும். அதனால், ஒரு சுற்று எண்ணி முடிக்க, 25 நிமிடங்களாகும் என, தேர்தல் பிரிவினரால் கணிக்கப்பட்டுள்ளது.

பல்லடம், சூலுார் மற்றும் சிங்காநல்லுார் ஆகிய மூன்று தொகுதிகளில் தலா, 24 சுற்றுகள்; கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு தொகுதியில் தலா, 22 சுற்றுகள்; கோவை தெற்கு தொகுதி சிறியது என்பதால், 18 சுற்றுகளில் ஓட்டுகள் எண்ணப்படும்.

அதிகபட்சமாக, 24 சுற்றுகள் எண்ணப்படுவதால், ஓட்டுகள் முழுமையாக எண்ணி முடிக்க, 12 மணி நேரம் தேவைப்படும். இதன்படி கணக்கிட்டால், இரவு, 8:30 மணியாகலாம். உணவு மற்றும் தேநீர் இடைவேளையை சேர்த்தால், முழுமையான ஓட்டு எண்ணிக்கை முடிவதற்கு, இரவு, 9:00 மணியாக வாய்ப்பு இருக்கிறது.

முகவர்களுக்கு கட்டுப்பாடு


வேட்பாளர்களின் முகவர்கள் ஓட்டு எண்ணுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் வர வேண்டும். நியமன கடிதங்கள், ஆளறியும் அடையாள அட்டை, தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். மொபைல் போன், ஐபேடு, லேப்-டாப் அல்லது ஒலி அல்லது ஒளியை பதிவு செய்யத்தக்க எந்தவொரு மின்னணு கருவிகளையும், ஓட்டு எண்ணும் மையத்துக்குள் கொண்டு செல்லக்கூடாது. பேனா, பென்சில், வெற்றுக் காகிதம், குறிப்பு அட்டை, ஓட்டுச்சாவடி முகவருக்கு தலைமை தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட படிவம் 17சி (ஓட்டு கணக்கு) நகல் ஆகியவற்றை, அவர்களது பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

தபால் ஓட்டு எண்ண 5 மணி நேரம்


தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு, ஆறு டேபிள்கள் போடப்பட்டு உள்ளன; 'சர்வீஸ் ஓட்டு' எண்ணுவதற்கு, ஒரே டேபிள் போடப்பட்டுள்ளது. தபால் ஓட்டுகளின் கவர்களை 'கட்' செய்வது; படிவங்களை சரிபார்த்து; கையெழுத்து இருக்கிறதா என ஆய்வு செய்வது; 'க்யூஆர்' கோடு ஸ்கேன் செய்வது; ஓட்டு செல்லத்தக்கதா என முடிவெடுத்து, 500 ஓட்டுகள் சேர்த்து, ஒரு பண்டல் போடப்படும். வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் எண்ணப்படும். தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு மட்டும், ஐந்து மணி நேரம் தேவைப்படும்.

ஆக, இறுதி நிலவரம் அறிய எப்படியும் இரவு 8:30 மணிக்கு மேலாகி விடும்!

கோவை தொகுதி 'பயோ டேட்டா!'

n கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 124 வாக்காளர்கள் உள்ளனர்.n 6 லட்சத்து, 79 ஆயிரத்து, 360 ஆண்கள்; 6 லட்சத்து, 87 ஆயிரத்து, 108 பெண்கள்; 129 மூன்றாம் பாலினத்தவர்கள் என, மொத்தம், 13 லட்சத்து, 66 ஆயிரத்து, 597 வாக்காளர்கள் ஓட்டளித்திருக்கின்றனர். n அரசு ஊழியர்கள், போலீசார் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், 85 வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் செலுத்திய, 7,239 தபால் ஓட்டுகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. 'சர்வீஸ் ஓட்டு' 376 உள்ளது. n இன்று காலை, 7:00 மணி வரை 'சர்வீஸ் ஓட்டு' பெறப்படும். அதன்பின் வரப்பெறும் ஓட்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us